குவைத்தில் 8 இலட்சம் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம்.!

Share this News:

குவைத் (07 ஜூலை 2020): கொரோனா வைரஸ் காரணமாக உலகமே பொருளதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. பெட்ரோல் மட்டுமே முக்கிய வருவாய் ஆதாரமாகக் கொண்ட குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு நிலைகள் ஆகிய காரணங்களால் தற்போது கடும் வேலைவாய்ப்பின்மையை சந்தித்துக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக, 48 இலட்சம் மக்கள் தொகை கொண்ட குவைத்-தில் அந்நாட்டு குடிமக்கள் வெறுமனே 13 லட்சம் மட்டுமே! மற்ற அனைவரும், வெளிநாட்டிலிருந்து வந்து அந்த நாட்டில் பணி புரிபவர்கள். அவர்களில் அதிகபட்சமாக,இந்தியர்கள் மட்டும் 14 லட்சம் பேர் இந்த நாட்டில் வசிக்கிறார்கள். எண்ணெய் நிறுவனங்கள் முதல் குவைத்தியர்கள் வீட்டுப் பணியாள் வரை ஆண்-பெண் இருபாலாரும் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றார்கள்.

கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக, நாட்டின் குடிமக்களிடையே பெருகி வரும் வேலை வாய்ப்பின்மையை கருத்திற்கொண்டு, குவைத் நாட்டிலும் உள்ளுர்வாசிகளுக்கு வேலை வாய்ப்பில் முக்கியத்தும் கொடுக்க அந்நாடு முடிவெடுத்துள்ளது. இதற்காக, புதிய சட்டதிருத்தம் கொண்டு வரப்பட உள்ளது.

அதன்படி, தற்போது, குவைத் மக்கள் தொகையில் 70 சதவீதமாக இருக்கும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கையை 30 சதவிகிதமாக குறைப்பது. இதன் அடிப்படையில், மொத்த மக்கள் தொகையில் இந்தியர்கள் 15 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கக் கூடாது ஆகிய முக்கிய அம்சங்ககளைக் கொண்ணடதாக சட்ட திருத்தம் இருக்கும்.

குவைத் பிரதமர் ஷேக் சபாத் அல் காலீத் ஷேக் சபா அவர்கள் கொண்டு வந்துள்ள இந்த புதிய சட்டத்தின்படி, ஏறக்குறைய 8 இலட்சம் இந்தியர்கள் குவைத் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாய சூழல் உருவாகும்.

குவைத் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவரால், அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய சட்டதிருத்த மசோதா-வுக்கு குவைத் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

குவைத் நாட்டு சட்டப்படி, நாடாளுமன்ற நிலைக்குழு கமிட்டி இதனை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த சட்ட திருத்தம் இறுதி வடிவம் பெற்று நடைமுறைக்கு வந்துவிட்டால், 8 இலட்சம் இந்தியர்கள் உட்பட, மொத்தம் 25 லட்சம் வெளிநாட்டவர்கள் குவைத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பது உறுதி.

இந்த வெளியேற்றம், படிப்படியாக நடைபெறுமா? அல்லது அதன் நடைமுறைப்படுத்தல் எவ்வாறு இருக்கும்? போன்ற விவரங்கள், சட்ட அமலாக்க ஷரத்துக்கள் அமலுக்கு வந்த பின்னர்தான் தெரிய வரும்.

இந்நிலையில், ஒரு பெரும் எண்ணிகையிலான தனது மக்களை இந்திய நடுவண் அரசும் அதன் கீழ் இயங்கும் மாநில அரசுகள் ஒவ்வொன்றும் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன? என்பது குறித்த கவலை இந்தியர்களிடையே பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது. அதுவும் குறிப்பாக, குவைத்தில் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டவர்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்ல மிகக்குறைந்த விமானங்களே ஏற்பாடு செய்யப்பட்டது,அதிகரிக்கும் வேலை வாய்ப்பின்மை, சம்பளமின்மை, பெருகி வரும் வாடகைக் கடன், பிள்ளைகள் கல்வி என்று ஏற்கனவே, விரக்தியில் இருக்கும் அவர்களுக்கு இந்த செய்தி இரட்டிப்பு கவலையை அளித்துள்ளது உண்மை..!


Share this News: