இவ்வருடம் 10 லட்சம் ஹஜ் யாத்திரீகர்களுக்கு சவூதி அரேபியா அனுமதி!

649

ரியாத் (09 ஏப் 2022): இவ்வருடம் (2022) 10 லட்சம் ஹஜ் யாத்ரிகர்களுக்கு சவூதி அரேபியா அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா தொற்று நோய் பரவியதில் இருந்து வெளிநாட்டு ஹஜ் யாத்ரிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாத சூழ்நிலை இருந்தது. இதனை அடுத்து இந்த ஆண்டு உள்நாடு மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து ஒரு மில்லியன் மக்களை ஹஜ் செய்ய அனுமதிக்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளதாக சவூதி பிரஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஹஜ்ஜுக்கு குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வரும் யாத்ரீகர்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு நாட்டிற்கும் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டின்படி அமையும். மேலும் ஹஜ் யாத்ரீகர்கள் அனைத்து சுகாதார பரிந்துரைகளையும் முறையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

அதன்படி ,ஹஜ் பயணம் செய்பவர்கள் 65 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஹஜ் பயணம் செய்பவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். எடுக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி, சவுதி அரேபியாவின் சுகாதார அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் உள்ளதாக இருக்க வேண்டும்.

சவுதிக்கு வெளியில் இருந்து வரும் யாத்ரீகர்கள் சவுதிக்கு புறப்படும் 72 மணி நேரத்திற்குள் நடத்தப்பட்ட கோவிட்-19 PCR பரிசோதனையின் நெகட்டிவ் முடிவைச் சமர்ப்பிக்க வேண்டும்.