உள்நாட்டுக் கலவரம் நடந்து வரும் சிரியாவின் அதிபருக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் அரபு நாடுகளால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ரஷ்யா மற்றும் சீனாவால் தோற்கடிக்கப்பட்டது.
சிரியாவில் அதிபர் பஷிர் அல் ஆசாத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் நடந்து வருகிறது. பஷிர் அல் ஆசாத் பதவி விலகக்கோரி மக்கள் நடத்தும் போராட்டத்தினை, இராணுவ பலத்தைக் கொண்டு அடக்க ஆசாத் முயற்சி செய்துவருகிறார்.
இதன் காரணமாக இராணுவத்துக்கும் மக்களுக்கும் இடையே நடக்கும் மோதல்களில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவில் பிரச்சனையைச் சுமூகமாக தீர்க்க அரபு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. எனினும் அதிபர் ஆசாத், பொதுமக்களுக்கு எதிராக நடத்தும் இராணுவ தாக்குதலை நிறுத்தாததைத் தொடர்ந்து, அரபு நாடுகள் இணைந்து ஐ.நா பாதுகாப்பு சபையில் சிரியாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தன.
சிரியாவில் நடக்கும் படுகொலைகள் உலகிற்குத் தெளிவாக தெரியும் நிலையில், அனைத்து நாடுகளின் ஆதரவுடன் சிரிய அதிபருக்கு எதிரான இத்தீர்மானம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிரியாவின் நட்பு நாடுகளான ரஷ்யாவும் சீனாவும் தங்களுக்கான வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி சிரியாவுக்கு எதிரான தீர்மானத்தைத் தோல்வியடைய செய்தன.
இதையடுத்து ரஷ்யா மற்றும் சீனாவுக்கு அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து முதலான உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
ஐநாவில் சிரியா அதிபருக்கு எதிராக தீர்மானம் தோல்வி!