சவுதி அரேபியா அரசின் ஆதரவுடன் செயல்படும் ஸலபி அமைப்புகள்தான் சிரியாவில் வன்முறையைத் தூண்டி வருவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
சிரியாவில் அதிபர் பஷார் பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. கடந்த வருடம் மார்ச் மாதம் தொடங்கிய இந்த ஆர்ப்பாட்டம் தற்போது உக்கிரமாக நடந்து வருகிறது. அரசுக்கெதிரான இந்தப் போராட்டம் தற்போது ஆயுதப் போராட்டமாக மாறியுள்ளது. சிரிய அரசிற்கெதிராக போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்துவதும் போராட்டக்காரர்களை அடக்குவதற்காக ராணுவம் துப்பாக்கி சூடு நடத்துவதும் அங்கு அன்றாட நிகழ்வாகி உள்ளது. இதில் பொதுமக்கள் உட்பட பலர் பலியாகியுள்ளனர்
சிரியாவில் இந்தக் கலவரத்தை தூண்டிவிடுபவர்கள் சவுதி அரேபிய அரசின் துணையுடன் செயல்படும் ஸலபி அமைப்புகள்தான் என ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு சபையில் பேசும்போது ஐ.நா.வுக்கான ரஷ்யத் தூதர் விடாலி சுர்கின் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரப் லீக் சிரியாவுக்கு கண்காணிப்பு குழுவை அனுப்பாமல் நிறுத்தி வைத்துள்ளதையும் சுர்கின் கண்டித்தார்.
”அண்மையில் சவுதி தொலைக்காட்சி ஒன்றில் ஸலபி அமைப்பைச் சார்ந்த மதத் தலைவர் ஒருவர் கண்காணிப்புக்குழுவினர் ரத்தம் சிந்துவதற்கு தான் விரும்புவதாக தெரிவித்ததினால் அரப்லீக் கண்காணிப்புக் குழுவினை சிரியாவுக்கு அனுப்பாமல் நிறுத்தி விட்டதாக” தான் அறிந்ததாக அந்தத் தூதர் குறிப்பிட்டார்.
மேற்கத்தேய நாடுகளின் உதவியுடன் சிரியாவுக்கெதிராக தீர்மானம் நிறைவேற்ற அரப் லீக் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தது. ஆனால் சிரியாவுக்கெதிராக புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதை ரஷ்யாவும் சீனாவும் எதிர்த்ததால் இது நிறைவேறவில்லை.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
சிரியா கலவரத்திற்கு சவுதி அரேபியா காரணம் - ரஷ்யா குற்றச்சாட்டு