கர்நாடகவில் பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ண பாலேமர் ,லட்சுமண் சவதி, சி.சி.பட்டீல், ஆகிய 3 பேரும் அமைச்சர்களாக பதவி வகித்தபோது, சட்டசபையில் செல்போன் மூலம் ஆபாச படம் பார்த்த காட்சிகள் தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு ஆயின.
நாடெங்கும் அதிர்ச்சி அலைகளையும், கடும் கண்டனத்தையும் ஏற்படுத்திய இந்த பலான விவகாரத்தால் அவர்கள் 3 பேரும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பேரவைத்தலைவர் போப்பையா சம்பந்தப்பட்ட 3 பேருக்கும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி இருந்தார்.
இந்த நிலையில் 3 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் விளக்கம் அடங்கிய பதில் கடிதத்தை பேரவைத்தலைவருக்கு அனுப்பினார்கள். அந்த கடிதங்கள் சட்டசபை செயலாளர் மூலமாக பேரவைத்தலைவருக்கு அனுப்பப்பட்டன.
பேரவைத்தலைவருக்கு அனுப்பிய விளக்க கடிதத்தில், ``தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை'' என்று சம்பந்தப்பட்ட 3 சட்டமன்ற உறுப்பினர்களும் குறிப்பிட்டு இருப்பதாக தெரிகிறது.
சட்டப்பேரவைத் தலைவர் போப்பையா விதானசவுதாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், `` 3 சட்டமன்ற உறுப்பினர்களிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. நான் இன்னும் அந்த கடிதத்தை படிக்கவில்லை. விளக்க கடிதம் வந்து விட்டதால், இந்த பிரச்சினை குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்படும். இது தொடர்பாக எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவேன்'' என்று தெரிவித்தார்.
ஆனால் சட்டசபை குழுவில் இடம்பெற மாட்டோம் என்று காங்கிரசும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் ஏற்கனவே அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
நாங்கள் தவறு செய்யவில்லை: பலான படம் பார்த்த முன்னாள் அமைச்சர்கள் கடிதம்
Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed