தன்னுயிரைப் பணயம் வைத்து வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் வீரர்களுக்கு உடை வாங்கிய விவகாரத்திலும் ஊழலின் கறை காணப்படுவதாக புதிய செய்தியொன்று கிடைத்துள்ளது.
வெடிகுண்டுகளை அகற்றும் நிபுணர்களுக்காக, மகாராஷ்டிர மாநிலத்தில் 6 கோடி ரூபாய் மதிப்பில் 80 உடைகள் வாங்கியதில் முறைகேடுகளும் ஊழலும் நடந்திருப்பதாகத் தெரிகிறது. இச்செய்தி இன்னமும் அரசால் அறிவிக்கப்படவில்லை.
வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்துச் செயலிழக்கும் நிபுணர்களுக்காக வெளிநாட்டிலிருந்து புல்லட் ப்ரூஃப் மேலாடைகளை சிறப்புச் சீருடைகள் திட்டத்தின் கீழ் வாங்க மஹாராஷ்டிர அரசு திட்டமிட்டது. 'டெக்னோ டிரேட் இம்பெக்ஸ் இன்டியா'' என்ற நிறுவனத்திடம் அதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
2009ல் முழு பணமும் கொடுக்கப்பட்டாலும் 2010-ம் ஆண்டுதான் உடைகள் வந்தன. உடைகள் வந்த பிறகு அவற்றைப் பரிசோதித்ததில் அவை மிகவும் தரக்குறைவாக இருந்தது தெரியவந்தது.
மாநில லஞ்ச ஒழிப்புத்துறையினர் இது குறித்து விசாரித்து உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அளித்துவிட்டனர். இந்த ஊழலில் காவல்துறை உயரதிகாரி ஒருவரும் மாநில அரசு அதிகாரி ஒருவரும் அந்தத் தனியார் நிறுவனத்தின் விமல் அகர்வால் என்பவரும் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணை அறிக்கை தன்னிடம் தரப்பட்டுவிட்டது என்று மாநில போலீஸ்துறைத் தலைவர் கே. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். எனினும் மேலிதிக நடவடிக்கைகள் குறித்து அரசோ, காவல்துறையோ ஏதும் கூறவில்லை.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
உயிர்காப்பு மேலாடைகளிலும் ஊழலின் கறை!
Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed