மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மக்கள் பயமின்றி இருக்கவும், நிலநடுக்கம் போன்ற பேரிடர் ஏற்பட்டால் போலீசார், ராணுவத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்று பார்க்கவும் தலைநகர் டெல்லியில் மிகப்பெரும் அளவில் ஒத்திகை நடத்தப்பட்டது.
டெல்லி-மொராதாபாத் இடையே 35 கி.மீட்டர் ஆழத்தில் பூமியில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டதாகவும், அது டெல்லியிலும் உணரப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ரிக்டர் அளவு கோலில் இது 7.9 ஆக பதிவானதாகவும், 48 வினாடிகள் நில நடுக்கம் நீடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர், 300 ராணுவ வீரர்கள், டெல்லி மாநில அரசின் பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர், அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக ஆஸ்பத்திரி ஊழியர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் மீட்பு பணிகளுக்கு விரைந்தனர்.
நிலநடுக்கம் ஏற்பட்டதாக பரவிய தகவலை தொடர்ந்து டெல்லியில் காலை 11.30 மணி முதல் 11.45 மணி வரை அனைத்து ரெயில் நிலையங்களும் மூடப்பட்டன. நகரப்பேருந்துள் உள்ளிட்ட வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் தலைநகரின் போக்குவரத்து முடங்கியது.
சிறிது நேர இடைவெளிக்கு பின்னர் இது நில நடுக்கம் ஏற்பட்டால் எப்படி செயல்பட வேண்டும் என்று ஒத்திகை நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
புதுடெல்லி, பழைய டெல்லி உள்பட 400 இடங்களில் பாலம், ரெயில் நிலையம், வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், ஆஸ்பத்திரிகள், விமான நிலையம், குடியிருப்பு வளாகங்கள், மேம்பாலங்கள், சுரங்கப் பாலங்கள் உள்பட 1000 பகுதிகளில் இந்த ஒத்திகை நடந்தது. இதன் காரணமாக டெல்லியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
நில நடுக்க ஒத்திகை: டெல்லியில் பரபரப்பு