கேரள கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள்மீது இத்தாலி கப்பலொன்று துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரு மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக நாளை கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கேரளத்திலுள்ள கொல்லம் கடல் பகுதியில் நேற்று மாலை 11 பேர் அடங்கிய மீனவர்கள் குழுவொன்று, புனித அந்தோணி என்ற பெயருடைய படகில் மீன்பிடிக்க சென்று கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் வந்த இத்தாலி கப்பலொன்றிலிருந்து திடீரென படகுமீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
துப்பாக்கிச் சூடு நடக்கும் நேரத்தில் படகிலுள்ள 9 பேர், படகின் அடித்தளத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர். கொல்லத்தைச் சேர்ந்த ஒருவர் படகினை ஓட்டிக்கொண்டிருந்தார். தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மீனவர் கழிவறையிலிருந்தார்.
இத்தாலி கப்பலிலிருந்து வந்த துப்பாக்கி ரவை முதலில் படகினை ஓட்டிக்கொண்டிருந்த கொல்லத்தைச் சேர்ந்த மீனவரைப் பலிகொண்டது. துப்பாக்கிச் சத்தம் கேட்டு கழிவறையிலிருந்து வெளியே வந்து பார்த்த, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த மீனவரும் பலியானார்.
தொடர்ந்து மூன்று நிமிட நேரத்துக்கு இத்தாலி கப்பலிலிருந்து படகுமீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அலறல் சத்தம் கேட்டு விழித்துக்கொண்ட மற்ற மீனவர்கள், படகின் தரை தளத்தில் படுத்துக் கொண்டதால் அவர்களுக்கு எந்த ஆபத்தும் நேரவில்லை.
சற்று நேரத்தில் பிற படகுகளிலுள்ள மீனவர்களும் இந்திய கடற்படையும் சம்பவ இடத்துக்கு விரைந்து சூழ்ந்து கொண்டனர். இதனால், மீதமிருந்த 9 மீனவர்களும் ஆபத்தில்லாமல் கரைக்குத் திரும்பினர்.
இத்தாலி கப்பல் தற்போது கொல்லம் கடல் பகுதியில் நங்கூரம் பாய்ச்சியுள்ளது. கப்பலிலிருந்து கேப்டன் உட்பட, பணியாளர்களைக் காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையில், "கடல் கொள்ளையர்கள் என்ற எண்ணத்திலேயே மீனவர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் சர்வதேச கடல் எல்லை சட்டங்களை இத்தாலி கப்பல் மீறவில்லை" எனவும் இத்தாலி பிரதமர் அறிவித்துள்ளார்.
பலியான இரு மீனவர்களின் உடல்கள் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரியில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பலியான இருவரின் குடும்பத்திற்குத் தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என கேரள முதல்வர் உம்மன்சாண்டி அறிவித்துள்ளார். மேலும், இத்தாலி கப்பல் கேப்டனிடமிருந்து மேலதிக இழப்பீடு பெறுவதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இத்தாலி கப்பலின் இந்த அத்துமீறிய செயலுக்கு எதிராக கொல்லம் பகுதியில் நாளை கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
இந்திய மீனவர்களைச் சுட்டுவீழ்த்திய இத்தாலி கப்பல்: கேரள கரையோரம் அதிர்ச்சி!
Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed