எஸ் பாண்ட் அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேட்டால் அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு¢ள்ளதாக நாடாளுமன்ற பொது கணக்கு தணிக்கை குழு கூறியுள்ளது.
இதையடுத்து, இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர், பாஸ்கர நாராயணா, கே.ஆர். ஸ்ரீதரமூர்த்தி, கே.என். சங்கரா ஆகிய நான்கு விஞ்ஞானிகள் மீது, மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இவர்கள் நான்கு பேரும், எந்த ஒரு அரசு பதவியும் வகிக்கக் கூடாது என, தடை விதிக்கப்பட்டது.
இது தொடர்பாக செய்தியாளர்களை நேற்று சந்தித்த இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர், "எங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இது மட்டுமல்லாமல், இந்த உத்தரவை பிறப்பிக்க காரணமாக இருந்தவர்கள், அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த மன்னிப்பு எங்களுக்காக அல்ல. நாடு முழுவதும் உள்ள ஒட்டு மொத்த விஞ்ஞானிகளிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.
எங்கள் மீது அரசு எடுத்த நடவடிக்கை தொடர்பான ஆணையே இன்னமும் கிடைக்கவில்லை. நாங்களும் இந்தியர்கள் தான்; இந்தியாவில் தான் வசிக்கிறோம். எங்களுக்கு மொபைல் போன் இணைப்பு, மின்னஞ்சல் இணைப்புகள் உள்ளன. தபால் மூலம் தகவல் தெரிவிப்பதற்கு, முகவரியும் உள்ளது. அப்புறம் ஏன், எங்களை நேரடியாக அணுகாமல், மீடியாக்கள் மூலம் அணுகும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஏன்? ஒரு சிலர், சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு செயல்படுகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் கடிதம் எழுதியுள்ளேன். அதில், 'எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாக நான் செயல்படவில்லை. எனக்கும், சக விஞ்ஞானிகளுக்கும் ஏற்பட்டுள்ள களங்கத்தைப் போக்க வேண்டும் என்பதே என் விருப்பம். எனவே, எங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்ய வேண்டும். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்' என, எழுதியுள்ளேன்."
இவ்வாறு மாதவன் நாயர் கூறினார்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
எங்களுக்கு அஞ்சல் முகவரியும், மின்னஞ்சல் முகவரியும் உண்டு: மாதவன் நாயர் ஆவேசம்!