சிறப்பாக பணியாற்றாத ஐ.ஏ.எஸ்(இந்திய ஆட்சிப் பணி), ஐ.பி.எஸ்(இந்திய காவல்துறை பணி), ஐ.எஃப்.எஸ்(இந்திய வெளியுறவுப் பணி) மற்றும் ஐ.ஆர்.எஸ்(இந்திய வருவாய் பணி) ஆகிய துறைகளில் பணிபுரிவோருக்குக் கட்டாய ஓய்வு அளிக்க மத்திய அரசு புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ் மற்றும் ஐ.எஃப்.எஸ் துறைகள் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளாகும். இத்துறைகள் சிறப்பாக செயல்படுவதற்கேற்ப நாட்டின் நிர்வாகம் சிறப்பாக அமையும். பிற துறைகளைப் போலன்றி, இத்துறைகளில் பணிபுரிவோர் திறமைவாய்ந்தவர்களாக இருப்பதை அரசு உறுதிபடுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
தற்போது இத்துறைகளுக்காக நடைமுறையிலிருக்கும் விதிகளின்படி, 30 ஆண்டுகள் கடந்த பின்னரே பணியாளர்களின் திறன் ஆய்வுக்குட்படுத்தப்படுகிறது. நாட்டின் நிர்வாகத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன், இத்துறைகளுக்கான திறனாய்வு செய்வதற்கான காலவரம்புகளில் புதிய விதிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது.
மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தலைமையிலான நிர்வாக சீர்திருத்த கமிசன் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆய்வுநடத்தி இப்புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. இவ்விதிமுறைகளுக்கு நாட்டில் பெரும்பாலான மாநிலங்கள் ஆதரவு தெரிவித்ததால் உடனடியாக இவ்விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதிய விதிமுறைகளின்படி,
மேற்கண்ட நான்கு துறைகளிலும் ஊழியர்களின் பணித்திறன் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இதேபோன்று, அடுத்தக்கட்ட ஆய்வ்ய் 25 ஆண்டுகள் அல்லது ஊழியர் 50 வயது நிறைவு செய்யும்போது நடத்தப்படும். இந்த ஆய்வில் ஊழியர்கள் திறமையாக செயல்படாதது கண்டறியப்பட்டால், அவர்களுக்குக் கட்டாய ஓய்வு அளிக்கப்படும்.
ஓய்வளிப்பதற்கு முன்னர், ஊழியர்கள் பணியாற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் மத்திய அரசு கலந்தாலோசிக்கும். மாநில அரசின் ஒப்புதலுடன் பணி நீக்கம் செய்யும்.
பணி நீக்கத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் எழுத்துப்பூர்வ அறிவிக்கை சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கப்படும். உடனடியாக நீக்க விரும்பினால் மூன்று மாதங்களுக்கான ஊதியம் மற்றும் படிகளை அளித்து அவர்களைப் பணியிலிருந்து விடுவிக்கலாம்.
மேற்கண்டவாறு புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
திறமையில்லாத ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்-களுக்குக் கட்டாய ஓய்வு: மத்திய அரசு அதிரடி!
Comments
"திறமையில்லாத ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்-களுக்கு........" எனும் தலைப்பே சரியில்லை.
பல்லாயிரக்கணக்கானோர் எழுதும் தேர்வில் மூன்று கட்ட வடிகட்டலுக்குப் பின் திறமையானவர்கள் எனத் தெரிந்தெடுக்கப்படும் சில நூறு பேருக்குக் கடுமையான பயிற்சியளித்து அதைகாரிகளாக்கி, முப்பதாண்டுகளுக்குப் பின் அவர்களுக்குத் திறமை இல்லை எனக் கண்டுபிடிப்பதற்கு ஓர் அரசு தேவையா?
திறமையான அதிகாரிகள் பணியில் சேர்ந்த பின் அரசியல் தலையீடு லஞ்சம் ஊழல் போன்றவற்றால் தம் பணியைச் சரிவர நிறைவேற்றாமல் போவதால் "சிறப்பாக"ப் பணியாற்றுவதில்லை.
எனவே சிறப்பாகப் பணியாற்றாத ஐ ஏ எஸ் ஐ பி எஸ் எனத் தலைப்பை மாற்றுங்கள்
திராவிட ஜோதி
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed