புதுச்சேரியில் சமீப காலமாக ரெளடிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு தொந்தரவு செய்கின்றனர். புதுச்சேரி 100 அடி சாலையில் கடைநடத்தி வந்த முதலியார்பேட்டை வண்ணாங்குளம் அய்யப்ப சுவாமி நகரை சேர்ந்த தங்கமணியை, நேற்று ரவுடி கும்பல் ஒன்று மாமூல் கேட்டு கத்தியால் வெட்டியுள்ளது. இச்சம்பவம், வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கமணியைத் தாக்கிய ரவுடிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். ரவுடிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நூறடி சாலையில் உரிமையாளர்கள் கடைகளை அடைத்து, இந்திராகாந்தி சதுக்கத்தில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
எஸ்.பி., நந்தகோபால், முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் மாறன், ரெட்டியார்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் இனியன், உருளையன்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் வியாபாரிகள்- போலீஸ் நல்லுறவுக் கூட்டம் நடத்துவதாக எஸ்.பி., தெரிவித்ததையடுத்து வியாபாரிகளை மறியலை கைவிட்டனர்.
இந்நிலையில் ரெளடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் புதுவை காவல்துறை துணைத் தலைவர் அதுல் கத்தியார் என்று எச்சரித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், புதுச்சேரியில் அடையாளம் காணப்பட்ட 50 ரெளடிகள் உள்ளனர். இவர்களில் 20 பேர் தொடர்ந்து செயல்படுகின்றனர். மொத்தம் 15 ரெளடிகள் மீது குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய அனுமதி கேட்டு, கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.தீபக்குமாருக்கு பரிந்துரைத்திருக்கிறோம். அவரது அனுமதி கிடைத்ததும், ரெளடிகள் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்படுவார்கள்.
பணம் கேட்டு ரெளடிகள் மிரட்டினால், உடனடியாக காவல் நிலையத்துக்கோ, காவல் உயரதிகாரிகளுக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும். இதற்காக காவலர்களின் தொலைபேசி எண்களை கடையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தி, துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்றார்.
புதுச்சேரியின் சட்டம் ஒழுங்கு தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் வைத்தியலிங்கம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ புதுச்சேரி அரசால், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியவில்லை என்று ஒத்துக்கொண்டால், இதில் மத்திய அரசை தலையிடச் சொல்வதில் தயக்கம் இல்லை.
ஏனம் கலவரத்தில் சிலரால் நிறுவனத்தின் உயரதிகாரி கொல்லப்பட்டார். காவல் நிலையமும் தாக்கப்பட்டது சட்டம் ஒழுங்கை சீர்படுத்த எவ்வித நடவடிக்கையையும் இந்த அரசு மேற்கொள்ளவில்லை. இதுகுறித்து விவாதிக்க சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும் என்றார்
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
புதுச்சேரியில் ரெளடிகள் அட்டூழியம்: வியாபாரிகள் கடை அடைப்பு