ஸ்ரீ பெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையுண்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை விலக்கிக் கொள்ளும்படி குடியரசுத்தலைவருக்குக் கருணை மனு அனுப்பினார்கள்.
அம்மனுவை குடியரசுத்தலைவர் நிராகரித்ததையடுத்து தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் நாகப்பன், சத்தியநாராயணன் ஆகியோர் இந்த 3 பேரையும் தூக்கில் போடுவதற்கு தடைவிதித்தனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர் ரவீந்திரன் முன்வந்து 'தூக்கு தண்டனை பெற்ற புல்லர் என்பவர் தனது கருணை மனுவை பரிசீலனை செய்வதில் காலதாமதம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் தொடர்ந்துள்ள வழக்கு பிப்ரவரி 22-ந்தேதி விசாரணைக்கு வருகிறது என்பதால், அந்த வழக்கின் முடிவை பொறுத்து இம்மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
அதுபோலவே மனுதாரர்கள் தரப்பில் வாதாட முன்வந்த வைகோ இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றம் செய்யக்கேட்டு வெங்கட் என்பவர் உச்ச நீதிமன்றம் தொடர்ந்துள்ள வழக்கும் பிப்ரவரி 22-ந்தேதி அன்று விசாரணைக்கு வருகிறது என்று தெரிவித்தார். இவ்விருவரின் கோரிக்கைகளை ஏற்று நீதிபதிகள் இந்த வழக்கினை மார்ச் 27-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
ராஜீவ் கொலைவழக்கு: தூக்குக்கெதிரான மனு மீது விசாரணை தள்ளிவைப்பு!