புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஆளுகைக்குட்பட்ட ஏனாம் பகுதி ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள ரீஜினல் செராமிக் நிறுவனத்தில் டைல்ஸ்கள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் சப்ளை செய்யப்படுகிறது.
இங்குள்ள 1200 தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி கடந்த ஒரு ஆண்டாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
போராட்டத்தை நடத்திய தொழிலாளர்களின் சங்க நிர்வாகி முரளி மோகன் அங்குள்ள காவல் நிலையத்தில் மர்மமான முறையில் இறந்து போனார். அவரை காவல்துறையினர் அடித்து கொன்றுவிட்டதாக கூறி தொழிலாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
உயிரிழந்த முரளி மோகனுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த பொதுமக்கள், ஆலையைச் சூறையாடினர். ஆலையின் துணைத் தலைவர் சந்திரசேகரன் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அவர் இறந்தார். ஆலை நிர்வாகத்துக்குச் சொந்தமான கல்லூரியும் தாக்கப்பட்டது. ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாகின. இதனால் பெரும் பதற்றம் உருவானது.
இதையடுத்து ஏனாமில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. பின்பு இக்கலவரம் தொடர்பாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இக்கலவரத்தில் ஈடுபட்டது தொடர்பாக இது வரை சுமார் 25க்கும் மேற்பட்டோரை ஏனாம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கலவரத்தில் ஈடுபட்ட நபர்கள் பெரும்பாலானவர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களை பிடிக்க ஆந்திரா காவல்துறை உதவியை ஏனாம் காவல்துறையினர் நாடியுள்ளனர்.
இந்த நிலையில் கலவர சம்பவத்தில் ரீஜென்சி செராமிக் டைல்ஸ் நிறுவனத்தின் துணை தலைவர் சந்திரசேகர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கு மட்டும் சி.ஐ.டி.பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை சி.ஐ.டி. காவல்துறை கண்காணிப்பாளர் ரவீந்திரன் நேரிடையாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி, ஐ.ஜி. சர்மா உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக காவல்துறை கண்காணிப்பாளர் ரவீந்திரன் தலைமையிலான குற்றப்புலனாய்வுக்குழுவினர் நாளை ஏனாம் புறப்பட்டு செல்கிறார்கள்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
ஏனாம் கலவரம் - அதிகாரி கொலை வழக்கு: சி.ஐ.டி. பிரிவிற்கு மாற்றம்!