கேரள கடலில் இத்தாலி கப்பலிலுள்ளவர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் ஒருவரின் குடும்பத்தினர் ரூபாய் 1 கோடி நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கேரளத்திலுள்ள கொல்லம் கடல்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்களின்மீது அப்பகுதியில் வந்த இத்தாலி கப்பலொன்று துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரு மீனவர்கள் பரிதாபமாக பலியாகினர்.
இச்சம்பவம் தொடர்பாக இத்தாலி கப்பலின் இரு மாலுமிகள்மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் சிறையிடப்பட்டுள்ளனர். இது தொடர்பாக இந்தியா மற்றும் இத்தாலி இடையே பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட மீனவர்களில் ஒருவரின் குடும்பத்தினர் கேரள உயர் நீதிமன்றத்தில் நஷ்டஈடு வழக்கு ஒன்று பதிவு செய்துள்ளனர். அதில்,
"ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும். நஷ்டஈடு கொடுக்காமல், இத்தாலிய கப்பலை இந்திய எல்லையில் இருந்து வெளியேற அனுமதிக்கக் கூடாது" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக, கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்குத் தலா 1 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட கேரள முதல் அமைச்சர் உம்மன்சாண்டி, இத்தாலி மாலுமிகளிடமிருந்தும் இழப்பீடு பெற்றுத்தர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என வாக்குறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
இத்தாலி கப்பல் மாலுமிகளால் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் 1 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு!