குடியரசுத் தலைவர் போட்டிக்கு பா.ஜ.க சார்பில் பீகார் ஆளுநர் வேட்பாளராக அறிவிப்பு!

புதுடெல்லி(19 ஜூன் 2017): குடியரசுத் தலைவர் போட்டிக்கு பா.ஜ.க சார்பில் போட்டியிடும் வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், பா.ஜ.க ஆட்சி மன்றக் குழு இன்று கூடியது. கட்சியின் மூத்தத் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க குடியரசுத் தலைவர் குறித்து தேர்வு செய்யப்பட்டது. அதன்படி, ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளராக போட்டியிடுவார் என்று அமித் ஷா அறிவித்துள்ளார்.

71 வயதாகும் ராம்நாத் கோவிந்த் தற்போது பீகார் ஆளுநராக பதவி வகித்து வருகிறார். இவர் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். வருகின்ற 23 ஆம் தேதி ராம்நாத் வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார். ஆனால், துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. விரைவில் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று அமித் ஷா கூறியுள்ளார். ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அளிப்பதாக தெலுங்கு தேசம் மற்றும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிகள் தெரிவித்துள்ளன.

ஜூலை மாதத்துடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவது குறிப்பிடத்தக்கது.