பசு விவகாரத்தில் அரசியல், மத சாயம் பூசக்கூடாது: பிரதமர் மோடி! Featured

Sunday, 16 July 2017 15:25 Published in இந்தியா

புதுடெல்லி(16 ஜூலை 2017): பசு பயங்கரவாத செயலை மத அல்லது அரசியல் சாயம் பூசக்கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பசு பாதுகாப்பு என்ற பெயரில் சில பயங்கரவாதிகள் முஸ்லிம்களையும் தலித்துகளையும் குறிவைத்து தாக்கி வருகின்றனர். பாஜக மத்தியில் பதவியேற்றது முதல் இந்த தாக்குதல் தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளன. ஆனால் பிரதமர் மோடி கடந்த வாரம்தான் முதன்முதலாக இதுகுறித்து வாய் திறந்தார். எனினும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்தவண்ணமே உள்ளன.

இந்நிலையில் நாக்பூர் மாவட்டத்தில் கடோல் நகர் பகுதியை சேர்ந்த சலீம் இஸ்மாயிலை (வயது 31) 13-ம் தேதி மாலை ஸ்கூட்டரில் மாட்டிறைச்சியை எடுத்துச் சென்றதாக கொடூரக் கும்பல் தாக்கியது. சலீம் இஸ்மாயில் தாக்கப்படுவதை சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பரவவிட்டனர். அதன்மூலம் குற்றவாளிகளை அடையாளம் கண்டுகொண்ட போலீசார் இதில் தொடர்புடைய 4 பேரை கைது செய்தனர். தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதும் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

நாளை பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. அப்போது எதிர்க்கட்சிகள் இவ்விவகாரத்தை எழுப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தினார். அனைத்து கட்சி கூட்டத்தின் போது முக்கிய விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டது. அப்போது பேசிய பிரதமர் மோடி பசு பாதுகாப்பு என வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்து உள்ளார் என்று மத்திய மந்திரி ஆனந்த் குமார் கூறினார்.

பிரதமர் மோடி பேசுகையில், பசு பாதுகாப்பு என்ற பெயரில் சட்டத்தை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கையை எடுக்கும்படி மாநில அரசுக்களிடம் கேட்டுக் கொண்டு உள்ளேன். பசுவின் பெயரில் இதுபோன்று நடைபெறும் வன்முறைகளுக்கு அரசியல் அல்லது மத சாயத்தை பூசக்கூடாது. இதனால் தேசம் பலன்பெறாது. பசு தாயை போன்றது என்ற நம்பிக்கையானது பரவலாக உள்ளது, இதனால் மக்கள் அவர்களுடைய கையில் சட்டத்தை எடுக்கக்கூடாது,” என பேசிஉள்ளார்.

 

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.