குத்துச்சண்டை உலகின் புதுமைப் பெண் இந்தியாவின் ரசியா ஷப்னம்! Featured

Friday, 11 August 2017 17:11 Published in இந்தியா

கொல்கத்தா(11 ஆகஸ்ட் 2017): இந்தியாவின் முதல் குத்துச்சண்டை பெண் பயிற்சியாளரான ரசியா ஷப்னம் (Razia Shabnam) குத்துச்சண்டையில் பழமையை உடைத்து பல்வேறு புதுமைகளை புகுத்தியுள்ளார்.

நாட்டின் 70 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் இந்தியாவின் பல்வேறு சாதனையாளர்களை நினைவுகூறும் வேளையில் ரஜியா ஷப்னமும் குறிப்பிடத்தக்கவர்.

கொல்கத்தாவை சேர்ந்த பின் தங்கிய ஏழை முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த பெண்ணான ரஜியா ஷப்னம் தனது குத்துச்சண்டை வாழ்க்கையை 1998 ஆம் ஆண்டில் தொடங்கினார். 2001 ஆம் ஆண்டு குத்துச்சண்டையில் இந்தியாவின் முதல் பெண் பயிற்சியாளரானார். இந்தியாவில் மட்டுமல்ல, சர்வதேச அளவில் நடுவராகவும், பணியாற்றியுள்ளார்.

வழக்கமான குத்துச்சண்டை முறையிலிருந்து மாறுபட்டு பல்வேறு புது யுக்திகளை ஷப்னம் குத்துச்சண்டையில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

முஸ்லிம் குடும்ப பின்னணியில் இருந்து வந்ததால் ஆரம்ப காலத்தில் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்தார். ஒரு முஸ்லிம் பெண் குத்துச்சண்டையில் ஈடுபடுவதை பலரும் எதிர்த்தனர். எனினும் அதையெல்லாம் உடைத்தெறிந்து சாதித்தார் ஷப்னம்.

இதுகுறித்து 37 வயதான ஷப்னம் தெரிவிக்கையில், " என்னை பலர் இழிவாகப் பேசினர். என் குடும்பத்தை கேவலப் படுத்தினர். எனக்கு நல்ல கணவர் கிடைக்கமாட்டார் என்றெல்லாம் கூறினர். எனினும் என் விளையாட்டை நான் விடவில்லை. இஸ்லாம் வகுத்து தந்த முறைப்படி உடையணிந்து போட்டிகளில் பங்கேற்றேன். பெரும்பாலான போட்டிகளில் சல்வார் கமீஸ், அணிந்து பங்கேற்றேன் அந்த உடை எனக்கு எந்த இடையூறையும் அளிக்கவில்லை. என் பெற்றோர் என் கணவர் எனக்கு உறுதுணையாக இருந்தனர்.

தற்போது Kidderpore School of Physical Culture என்ற பெயரில் குத்துச்சண்டை பயிற்சிப் பள்ளியை நடத்தி வரும் ஷப்னம், இந்து முஸ்லிம் அனைவருக்கும் பயிற்சி அளித்து வருகிறார். ஆனால் உடை விசயத்தில் மிகவும் கவனத்தை கையாளுகிறார். சிலர் பர்தா அணிந்துகூட குத்துச்சண்டையில் ஈடுபடுவது குறித்து பெருமையாக பேசுகிறார் ஷப்னம்.

 

Last modified on Friday, 11 August 2017 17:13
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.