சீன எல்லையில் போர் பதற்றம்: ராணுவம் குவிப்பு!

சிக்கிம்(12 ஆகஸ்ட் 2017): சீன எல்லையில் இந்திய ராணுவப்படைகள் குவிக்கப் பட்டுள்ளன.

இந்தியா - சீனா இடையே 'டோக்லாம்' விவகாரம் தொடர்பாக கடந்த சில நாள்களாக போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய ராணுவப் படைகள் குவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

எல்லையில் ராணுவப் படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருப்பதை உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். டோக்லாம் பகுதியில் சீனப் படைகள் குவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சீனாவை ஒட்டியுள்ள இந்திய எல்லையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.

இருநாடுகளுக்கும் இடையே போர் ஏற்படலாம் என்று பரவலாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்திய ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருப்பது, பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. அருணாச்சலப்பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் உள்ள ராணுவப் படைகள் இந்தியா - சீனா எல்லையில் நிறுத்தப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.