பாபர் மசூதி விவகாரத்தில் அமித்ஷாவின் கேள்விக்கு காங்கிரஸ் பதிலடி!

புதுடெல்லி(05 டிச 2017): பாபர் மசூதி - ராமர் கோவில் விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்திருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ரந்தீப் சுர்ஜேவாலா பதில் அளித்துள்ளார்.

பாபர் மசூதி தொடர்பான விசாரணை செவ்வாயன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, சன்னி வக்பு வாரியம் சார்பில் வாதாடிய காங்கிரஸ் முத்த தலைவரும் வழக்கறிஞருமான கபில் சிபல் இந்த வழக்கை 2019 பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் விசாரிக்க வேண்டும் என்றார். மேலும் இவ்விவகாரம் தொடர்பாக 5 அல்லது 7 நீதிபதிகள் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டின் அரசியலமைப்பு பெஞ்ச் விசாரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் மனுவை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துவிட்டது.

இதற்கிடையே பாபர் மசூதி வழக்கில் சன்னி வக்பு பிரிவுக்கு ஆதரவாக வாதாடும் கபில் சிபல் குறித்து கேள்வி எழுப்பிய அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி குஜராத்தில் கோவில்களுக்கு செல்கிறார், மறுபக்கம் காங்கிரஸ் தலைவர் கபில் சிபலை வைத்து அயோத்தி வழக்கை காலம் கடத்த செய்கிறார். இவ்விவகாரத்தில் ராகுல் காந்தி தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த வேண்டும். என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா, காங்கிரஸ் தன்னுடைய நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளது. அயோத்தி விவகாரம் சுப்ரீம் கோர்ட்டால்தான் முடிவு செய்ய வேண்டும். சட்ட அமைச்சரும் இதனை தெளிவுபடுத்தியுள்ளார். கபில் சிபல் ஒரு வழக்கறிஞர் அவர் யாருக்காக வாதாடுவது என்பது அவரது விருப்பம் இதில் காங்கிரஸ் கட்சி எதுவும் கூற இயலாது. பாஜக ராமாயணத்தில் வரும் கூனி வேலை செய்கிறது. தற்போதைய நிதியமைச்சர் அருண்ஜேட்லியும் போபால் விஷ வாயு சம்பவத்தில் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். அதற்கு பாஜக முழு பொறுப்பேற்குமா? என்று தெரிவித்துள்ளார்.