மதவெறிக்கு பலியான ஜுனைத் குடும்பத்துக்கு இதுவரை கிடைக்காத இழப்பீடு!

புதுடெல்லி(07 டிச 2017): மாட்டுக்கறி விவகாரத்தில் மதவெறிக்கு பலியான ஹாபிஸ் ஜுனைத் குடும்பத்திற்கு அரசு அறிவித்த இழப்பீடு இதுவரை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

கடந்த ரம்ஜான் பெருநாள் கொண்டாட்டத்திற்காக டெல்லியிலிருந்து பொருட்கள் வாங்கிச் சென்ற அரியானா சிறுவன் ஹாபிஸ் ஜுனைத் மற்றும் அவரது சகோதரர்கள் அவர்கள் பயணித்த ரெயிலில் வைத்து மதவெறி கும்பலால் தாக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டனர்.

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தில் ஜுனைத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சகோதரர்கள் இருவரும் படுகாயமடைந்து இதுவரை ஒரு வேளையும் செய்ய இயலாத நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் அரியானா அரசு ஹாபிஸ் ஜுனைத் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் இழப்பீடு தருவதாக அறிவித்தது. ஆனால் இதுவரை அது வழங்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியர் செஞ்சிலுவைச் சங்கத்திலிருந்து பெற்றிட்ட ஐந்து லட்ச ரூபாயை அளித்திருந்தார்.

இதுகுறித்து ஹரியானா மாநில முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கடிதம் எழுதியுள்ளார். அதில் உடனடியாக ஜுனைத் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.