துயரங்களிலிருந்து மீளாத பாபர் மசூதியின் இறுதி இமாம் குடும்பம்!

அயோத்தி(07 டிச 2017): பாபர் மசூதியின் இறுதி இமாம் அப்துல் கஃபார் கான் குடும்பம் பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 1992  அன்று அவர்களுக்கு ஏற்பட்ட துயரங்களிலிருந்து இன்றுவரை மீளவில்லை.

அயோத்தியில் டிசம்பர் 6 1992 இந்துத்துவ கும்பலால் முகலாய மன்னன் பாபர் கட்டிய பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அந்த மசூதியில் தொழுகை நடத்தும் இறுதி இமாமாக இருந்தவர் அப்துல் கஃபார் கான். இவர் 1990 லேயே மரணித்துவிட்டார்.

இந்நிலையில் 1992 டிசம்பர் மாதம் அப்துல் கஃபார் கானின் பேத்திக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு குடும்பமே மகிழ்ச்சி வெள்ளத்தில் இருந்தது. ஆனால் டிசம்பர் 6 ஆம்தேதி பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப் பட்டதோடு, இந்துத்துவா பயங்கரவாத கும்பலால் அயோத்தியில் முஸ்லிம்களின் வீடுகளும் சூரையாடப்பட்டன பலர் கொல்லப்பட்டனர்.

இந்த பயங்கரவாத கும்பலின் இரத்தப் பசிக்கு மகிழ்ச்சி வெள்ளத்தில் இருந்த பாபர் மசூதி இமாம் அப்துல் கஃபார் கான் குடும்பமும் இரையாகின. இமாமின் வீட்டுக்குள் நுழைந்த கும்பல் இமாமின் குடும்பத்தை கடும் ஆயுதங்களால் தாக்கின. அப்துல் கஃபார் கான் மகன் முஹம்மது சபீர் பயங்கரவாத கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இன்றும் அந்த சம்பவங்களை நினைத்து கண்ணீர் வடிக்கிறார். அப்துல் கஃபார் கான் மருமகளும் முஹம்மது சபீரின் மனைவியுமான 70 வயது தய்புன்னிஷா பேகம்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,"எங்கள் வீட்டுக்குள் நுழைந்த கும்பல் எங்களை சரமாரியாக தாக்கியது. வீட்டில் இருந்த பொருட்களை சின்னாபின்னமாக்கியது. நாங்கள் அனைவரும் ஆளுக்கொரு திசையாக சிதறி ஓடினோம். ஆனால் என் கணவர் அந்த கும்பலிடம் சிக்கி கொல்லப்பட்டார்" என்கிறார் கண்ணீருடன் தய்புன்னிசா பேகம்.

மேலும் சபீரின் மகனும் பாபர் மசூதி இமாம் அப்துல் கஃபார் கானின் பேரனுமான முஹம்மது ஷாஹித் கூறுகையில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்பு எங்கள் வீட்டைத்தான் அந்த கும்பல் முதலில் குறி வைத்தது. நாங்கள் தப்பித்து ஓடினோம். ஆனால் என் தந்தையை காப்பாற்ற முடியவில்லை." என்கிறார்.

எங்கேயோ சிதறி உயிர்பிழைத்து டிசம்பர் 29 ஆம் தேதி அச்சத்துடன் எங்கள் வீட்டை நோக்கி வந்தோம், மகிழ்ச்சி வெள்ளத்தில் இருந்த வீடு இப்படி அலங்கோலமாக இருப்பதை கண்டு கண்ணீருடன் சகித்துக் கொண்டோம். என்கிறார் தய்யுபுன்னிசா பேகம்.

முஹம்மது ஷாஹிதுக்கு மூன்று பிள்ளைகள். ஒருவர் மும்பையிலும் ஒருவர் சவூதியிலும் உள்ளார். மகள் மருத்துவ நுழைவுத் தேர்வுக்காக தயாராகி வருகிறார். இமாமின் குடும்பம் இன்றுவரை ஏழ்மையிலேயே வாழ்க்கையை கடக்கிறது. சின்னபின்னமாக்கப் பட்ட அவர்களது வீட்டில்தான் வாழ்கிறார்கள். ஒரு ஆட்டோ ரிக்‌ஷாவில் தினம் வரும் 300 ரூபாய் வருமானத்திலேயே அவர்களது குடும்பம் வாழ்க்கையை நடத்துகிறது.

பாபர் மசூதியை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டும் என்கிற உறுதியோடு நீதிமன்றத்தில் போராடி வருபவர்களில் ஒருவரும், பாபர் மசூதி முஅத்தின் ஹாஜி பெஹு சாஹிப் அவர்களின் மகனுமான ஹாஜி மெஹ்பூப் கூறுகையில், "என் தந்தையும், இமாம் அப்துல் கஃபார் கானும் இணைபிரியாத நண்பர்கள். இமாம் அவர்கள் குர்ஆனை முழுமையாக படித்து விளக்கம் பெற்றவர். இன்றும் அந்த மசூதிக்கு போய் வத மகிழ்வான நினைவுகள் என்னுள் நிழலாடிக்கொண்டு இருக்கின்றன" என்கிறார்.

 

 

Last modified on Thursday, 07 December 2017 16:53