தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சவூதி- ஜித்தாவில் ரத்த தான முகாம்! Featured

ஜித்தா(14 மே 2017): தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சவூதி அரேபியா ஜித்தாவில் இரத்த தான முகாம் நடைபெற்றது.

முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் உம்ரா செய்வதற்காக புனித நகரான மக்காவிற்கு அதிக அளவில் முஸ்லிம்கள் வருகை புரிவார்கள். அவர்களில் தேவைப்படுவோருக்கு வழங்குவதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் எற்பாட்டில் நேற்று ஜித்தாவில் இரண்டு இரத்ததான முகாம்கள் நடைபெற்றது. நேற்று (12-05-2017 வெள்ளிக்கிழமை) ஜித்தாவிலுள்ள கிங் ஃபஹத் மருத்துவமனையில் நடந்த முகாமில் 75 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 67 பேரிடமிருந்து இரத்தம் கொடையாக பெறப்பட்டது.

அதேநாளில் கிங் அப்துல் அஸீஸ் மருத்துவமனையில் நடைபெற்ற இரத்ததான முகாமில் 120 பேர் கலந்து கொண்டனர். அவர்களிடமிருந்து 106 பேரிடமிருந்து இரத்தம் தானமாக பெறப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டல இரத்ததான ஒருங்கிணைப்பாளர் முஸ்தபா கூறும் போது, "இந்திய சுதந்திரதினம், இந்திய குடியரசுதினம் போன்ற நாட்களில் இது போன்ற முகாம்களை நடத்துவதுடன் உலகெங்கிலும் இருந்து மக்காவுக்கு வருகை தரும் புனித பயணிகளில் விபத்து, நோய், அறுவை சிகிச்சை நேரங்களில் இரத்தம் தேவைப்படுவோருக்காக முன்னேற்பாடாக வருடந்தோறும் இரத்ததான முகாம்களை நடத்தி வருகின்றோம். இந்த முகாம்களில் வழங்கப்பட்ட இரத்தம் இந்த வருடம் ரமலான் மாதத்தில் உம்ரா செய்ய சவுதி வருபவர்களில் தேவைப்படுவோருக்கு வழங்குவதற்காக அனுபபப்படும் என்றார்.

இவரது மேற்பார்வையில் கிங் ஃபஹத் மருத்துமனையில் நடைபெற்ற முகாமில் இரத்த வங்கி ஒருங்கிணைப்பாளர் அலி உமர் ஹமது தலைமையிலான குழு சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது. அதுபோன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டல தலைவர் முஹமது முனாப் தலைமையில் கிங் அப்துல் அஸீஸ் மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகாமில் 120 பேர் கலந்து கொண்டனர்.

மருத்துவமனையின் பரிசோதனை மைய இயக்குநர் டாக்டர் லுபானா அல் முனவி மற்றும் இரத்தவங்கி இயக்குநர் டாக்டர் அய்மன் அல் சபரி ஆகியோர் இது போன்ற முகாம்கள் மக்களிடத்தில் இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வை அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்.
இரத்த வங்கி கண்காணிப்பாளர் அலி அல் கோதாரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் மற்றும் கொடையாளிகளுக்கு நன்றிகளை தெரிவித்தார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டல தலைவர் முஹமது முனாப் கூறும் போது, “இது போன்ற முகாம்கள் மட்டுமின்றி எந்நேரத்தில் தேவைப்பட்டாலும் அவசர இரத்ததானம் செய்து வருகின்றோம். ‘பிறருக்கு இடர் தரும் வகையில் தரையில் கிடக்கும் ஒரு முள்ளை அல்லது கல்லை எடுத்து அப்புறப்படுத்துவது கூட இறைவனுக்கு செய்யும் வழிபாடாகும்’ என்று இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் சொன்னதால் இதுபோன்ற மனிதநேயப் பணிகளை நாங்கள் செய்து வருகின்றோம். இந்த முகாம் ஜித்தா மண்டலம் நடத்தும் 14 வது முகாமாகும்“ என்று குறிப்பிட்டார்.

சவுதி பெண்கள் உட்பட ஜாதி,மத பேதமின்றி அனைவரும் கலந்து கொண்ட இம்முகாமில் பெரும்பான்மையினர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.