Sunday, 18 June 2017 05:46

ரியாத்: பரங்கிப்பேட்டை இஸ்லாமிய சங்கம் அமைப்பின் நோன்புத் துறப்பு விழா Featured

ரியாத்(18 ஜூன் 2017): பரங்கிப்பேட்டை இஸ்லாமிய சங்கம் அமைப்பின் நோன்புத் துறப்பு விழா நிகழ்வு 16 ஜூன் 2017ல் பத்தாஹ்விலுள்ள ரமாத் அரங்கில் சிறப்பாக நடந்தேறியது.

மாணவி சுஹைலா இறைமறை ஓதித் தொடங்கி வைக்க, அமைப்பின் தலைவர் பஃக்ருத்தீன் இப்னு ஹம்துன் தனது தலைமையுரையில் பரங்கிப்பேட்டையின் புறச்சிறப்புகளை அழகுறச் சுட்டிக் காட்டி, ஊரின் அகச்சிறப்பாகவும் ஆன்மச் சிறப்பாகவும் கொடைத்தன்மை விளங்குவதாகக் குறிப்பிட்டார். "தனக்குத் தேவை இருந்த போதிலும், சக மனிதர் தம் தேவைக்கு முன்னுரிமை அளிப்பவர்களாக" முஸ்லிம்கள் இருப்பார்கள் என்று குர்ஆனின் 59:09 வசனத்தைச் சுட்டி விளக்கினார்.

செயலாளர் S.காதர்மஸ்தான் அமைப்பின் சார்பில் செய்துள்ள பணிகளையும், இனி இன்'ஷா அல்லாஹ் செய்ய நாடியுள்ள திட்டங்களையும் விரிவாக எடுத்துரைத்தார்.

உதயம் அமைப்பின் செயல் தலைவர் சகோ. ஜாஃபர் சாதிக் சுருக்கமான வாழ்த்துரை வழங்கினார்.

மனிதமும் புனிதமும் என்ற தலைப்பில் விரிவாகச் சிறப்புரை ஆற்றிய சகோ. கு. நிஜாமுத்தீன் மனிதர் மனிதருக்குச் செய்ய வேண்டிய கடமைகளுள் ஒற்றுமையைப் பேணுவதும் ஒன்று என்று குறிப்பிட்டார்.

கூட்டுத் தொழுகையைக் குறிக்கும் குர்ஆன் வசனங்களின் மூலம் ஒற்றுமையாகத் தலைமைக்குக் கட்டுப்பட வேண்டுவதன் தேவையையும் எடுத்துரைத்தார். ஜக்காத் என்பது வெறுமே தங்கத்தில் என்று எடுத்துக்கொள்ளாமல், ஒருவர் தன் சேமிப்பின் முழு உடமைகளிலும் ஜக்காத் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசினார். லைலத்துல் கத்ரு இரவுகளின் முக்கியத்துவம் அதை மிகச் சிறப்பாக அடையும் வழிகளையும் அவர் பின்னர் தன் இறுதி உரையில் விளக்கினார்.

நோன்புத் துறப்புக்குப் பின்னர் மெளலவி SM. இஸ்மாயில் நத்வி இறைவழியில் செலவு செய்வதன் இன்றியமையாமை என்ற தலைப்பில் சீரியதொரு உரை நிகழ்த்தினார்.

ஒருவர் தன் இச்சை (நஃப்ஸ்) உடன் போராடுவதே மிகப் பெரிய ஜிஹாத் என்றும், இறைவழியில் செலவிடாமல் தடுக்கும் நஃப்ஸை போராடி வென்று சக மனிதத் தேவைகளுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டியதன் அவசியத்தை அல்குர்ஆனுடைய சூரா தவ்பாவின் வசனங்களிலிருந்து அவர் விளக்கினார். இறைவழியில் செலவிடல் (இன்ஃபாக் ஃபீ சபீலில்லாஹ்) என்பதன் விரிவான பொருள் விளக்கத்தையும் மெளலவி விவரித்தார்.

பொருளாளர் R.தமிஜூத்தீன் செலவுக் கணக்கு விவரங்களைச் சமர்ப்பித்தார்.

நிகழ்ச்சியை சிறப்பான முறையில் சகோ.ஹ. முஸ்தஃபா தொகுத்து வழங்கினார்

இரண்டு அமர்வுகளாக நடைபெற்ற கூட்டத்தின் இறுதியில் நன்றியுரைக்குப் பின்னர் விருந்து பரிமாறப்பட்டது.

துஆ ஓதி கூட்டம் நிறைவுற்றது.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.