சவூதியில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் ஆயிரக்கணக்கில் கைது! Featured

ரியாத்(28 நவ 2017): சவுதியில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகிறனர்.

சவூதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்கள் நாட்டை விட்டு வெளியேர சுமார் 8 மாதங்கள் பொதுமன்னிப்பு வழங்கியிருந்த நிலையில் பொதுமன்னிப்பு காலம் கடந்த நவம்பர்15 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் சவூதியின் அனைத்து பகுதிகளிலும் சவூதி காவல்துறையினர் சோதனைகளை அதிகப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 10 தினங்களில் சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்கள் சுமார் 69 ஆயிரத்து 233 பேரை குடியுரிமை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் வீடுகளில் சாலைகளில் சில நிறுவனங்களில் பணிபுரிந்தபோது சட்டவிரோதமாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் இவர்களுக்கு பணி வழங்கிய நிறுவனங்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இக்காமாவில் உள்ள விசாவிற்கு மாற்றமாக பணிபுரிந்தாலும் கைது நடவடிக்கைகள் அல்லது பெருந்தொகை அபராதம் விதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலமுறை பொதுமன்னிப்பு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுவிட்டதால் இம்முறை சோதனை முறையில் கடுமை இருக்கும் என்று தெரிகிறது. ஏற்கனவே சவூதி அரசு அறிவித்ததன் அடிப்படையில் சட்டவிரோதமாக சவூதியில் உள்ளவர்களுக்கு இடம் அளித்து அடைக்கலம் கொடுப்பவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Last modified on Tuesday, 28 November 2017 02:41