ஈரானில் மீண்டும் நிலநடுக்கம்! Featured

தெஹ்ரான்(01 நவ 2017): ஈரானில் வெள்ளிக்கிழமை காலை மீண்டும் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

ஈரானின் கிழக்கு பகுதியில் உள்ள கெர்மான் மாகாணத்தில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 8 லட்சம் மக்கள் வசிக்கும் கெர்மான் நகரில் இருந்து 60 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதன் காரணமாக, கெர்மான் நகரில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. பொதுமக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் முதலில் தெரிவித்தது. பின்னர் 6.0 ரிக்டர் என திருத்தி அறிவிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் உணரப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாக வில்லை. கடந்த 12-ம் தேதி ஈராக் எல்லையை ஒட்டியுள்ள ஈரான் பகுதியில் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் இரு நாடுகளிலும் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 8000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Last modified on Saturday, 02 December 2017 02:47