சவூதி சென்றடைந்தார் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ்! Featured

ரியாத்(06 பிப் 2018): சவூதியில் நடைபெறும் ஜெனத்ரியா கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்திய வெளியுரவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ரியாத் சென்றடைந்தார்.

சவூதி அரேபியாவின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ரியாத் அருகே உள்ள ஜெனத்ரியா என்ற இடத்தில் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சியை அந்நாட்டு அரசு நடத்துகிறது.

ஓட்டக பந்தயம், குதிரை பந்தையம், நடனம், புத்தக கண்காட்சி, சவூதி அரேபிய அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சிகள் ஆகியவை இதில் நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 லட்சம் மக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான ஜெனத்ரியா கலைநிகழ்ச்சி நாளை தொடங்க உள்ள நிலையில், இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்தியாவுக்கு மன்னர் சல்மான் அழைப்பு விடுத்திருந்தார். தங்களை அழைத்ததற்கு இந்தியா நன்றி தெரிவித்திருந்த நிலையில், மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் இணை மந்திரி வீ கே சிங் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இதற்காக சுஷ்மா சுவராஜ் ரியாத் நகருக்கு சென்றடைந்தார்.

இந்த கண்காட்சியில் இந்தியாவின் சார்பில் யோகா, இஸ்ரோ, டிஜிட்டல் இந்தியா மற்றும் தமிழக பண்பாட்டு முக்கிய அரங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.