கடல்நீரைக் குடிநீராக்கும் எளிய நுட்பம் – எகிப்தில் கண்டடைவு! Featured

கெய்ரோ 22 அக்.2015):எகிப்தில் உள்ள அறிவியலாளர்கள் இணைந்து கடல்நீரிலிருந்து அதிக சிரமம் இல்லாமல் குடிநீரை உண்டாக்கும் எளிய, விலை குறைந்த நுட்பம் ஒன்றைக் கண்டறிந்து புரட்சி செய்துள்ளனர்.

Water Science & Technology என்னும் ஆராய்ச்சி இதழில் ஆய்வாளர்கள் மோனா நயீம், மஹ்மூத் எளிவா, அஹ்மத் அல் ஷஃபாயி, மற்றும் அபீர் முனீர் ஆகியோர் இக்கண்டடைவு குறித்து குறிப்பிட்டுள்ளனர். மீள் சவ்வூடுபரவுதல் (Reverse Osmasis) என்னும் மரபு முறையில் கடல்நீரை உப்பு நீக்கிக் குடிநீராக்க மின்சாரச் செலவு பெருமளவு என்றிருக்கையில் , இந்த ப் புதிய முறையில் மின்சாரமே தேவையில்லை என்பதும், அதற்காகும் கருவிகளும் எளியதும் எல்லாவிடத்தும் கிடைப்பதுமாகும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அறிவியலாளர்கள் அனைவரும் அலெக்‌ஷாந்திரியா பல்கலைகழகத்தவர்கள் என்பது குறிக்கத்தக்கது.

ண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் மத்திய கிழக்கு மற்றும் ஆஃப்ரிக்க நாடுகளுக்கும், கடல் நீரை க் குடிநீராக்கத் திட்டமிடும் (சென்னை போன்ற) பெருநகரங்களுக்கும் இந்தக் கண்டடைவு பெரும் வரப்பிரசாதமாக அமையும் என்று நம்பப்படுகிறது.

உப்புநீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுத்துக் குடிநீராக மாற்றும் மரபார்ந்த தற்போதைய வழிமுறை அதிக செலவு வைக்கும் பல்லடுக்கு முறை என்பதை ஒப்பிட தற்போதைய ஆராய்ச்சி பெரும் வரவேற்பிற்குரியதாக உள்ளது. மேலும் இந்த மரபார்ந்த முறையில் மீதமாகும் உப்புக்கசடுகளும் வண்டல்களும் மீண்டும் கடலிலேயே கொட்டப்படுவதால் கடலில் சூழல்மாசுபாடும் மாறுபாடும் ஏற்படுவதையும் இப்புதிய ஆய்வு சரிசெய்ய வழிகோலுகிறது.

Pervaporation எனப்படும் பகுதி ஆவியாக்கல் முறையில் மென்னெகிழி மற்றும் பீங்கான் வடிகட்டிகளின் மூலம் கடல்நீரின் திட திரவ நிலைகள் முதலில் பிரிக்கப்பட்டு, பின்னர் திரவநிலை மீண்டும் ஆவியாக்கப்பட்டு குளிர்விக்கப்படும் இரட்டை அடுக்கு முறையில் இந்தக் குடிநீர் பெறப்படுவதாக எகிப்திய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Last modified on Thursday, 22 October 2015 16:51