கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் - சவூதிக்கு ஈரான் எச்சரிக்கை! Featured

ஈரான்(26 அக். 2015): பிரபலமான ஷியா மதத் தலைவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் சவூதி அரேபியா அதற்காக கடும் விலையைக் கொடுக்க வேண்டி வரும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சவூதியைச் சேர்ந்த பிரபலமான ஷியா மதத்தலைவரான ஆயத்துல்லா நிம்ரு அல் நிம்ரு, அரபு வசந்தத்தின் தொடர்ச்சியாக சவூதியில் மன்னராட்சியை ஒழித்துவிட்டு மக்களாட்சி ஏற்படுத்தக் கோரி அரசுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்த வருமாறு தமது ஆதரவாளர்களுக்கு அழைப்பு அழைப்பு விடுத்தார். அதைத் தொடர்ந்து கடந்த 2012ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார்.

நாட்டு நலனுக்கு எதிராகச் செயல்பட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, மரண தண்டனைக்குப் பின் அவரது உடல் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கில், கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் ஞாயிற்றுக் கிழமை அன்று உறுதி செய்தது.

இந்த வழக்கின் ஆவணங்கள் மன்னர் சல்மானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மரண தண்டனையைத் தள்ளுபடி செய்யவோ அல்லது நிறைவேற்றவோ அவருக்கு அதிகாரம் உண்டு.

நீதிமன்றத்தில் நிம்ரின் தண்டனை உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து சவூதி அரசுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஷேக் நிம்ரின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால், அதற்காக சவூதி அரேபியா கடும் விலை அளிக்க வேண்டி வரும் என்று ஈரானிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஹுசைன் அமீர் கூறியுள்ளார்.

சவூதி அரேபியாவின் சூழல் நன்றாக இல்லை. ஆத்திரமூட்டும் வகையில் உள்ளது. தமது சொந்த குடிமக்களிடையே பழங்குடியினர் போன்ற போக்கை மேற்கொள்வது அந்நாட்டு அரசுக்கு உகந்ததாக இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.