இலங்கையின் மன்னார் வளைகுடாவில் பெற்றோலிய அகழ்வில் ஈடுபட்டிருக்கும் கெய்ன் லங்கா நிறுவனம் அங்கு இரண்டாவது எரிவாயு படிமம் உள்ளதை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பிரிவு தெரிவிக்கையில் கெய்ன் லங்கா நிறுவனம் இலங்கையின் எண்ணெய் வள அபிவிருத்தி செயலகத்துக்கு இரண்டாவது எரிவாயு படிமத்தையும் கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது..
மன்னார் வளைகுடா பகுதி கடலில் எஸ்.எல்.2007.01.001.3 பரகுடா 1ஜீ/1 என பெயரிடப்பட்டுள்ள எண்ணெய்க் கிணறில் 4700 மீற்றர் ஆழத்திலும், நிலத்திலிருந்து 1509 மீற்றர் ஆழத்திலும் இரண்டாவது கிணறு முன்னைய கிணற்றைவிட 38 கிலோ மீற்றர் தொலைவில் அகழப்பட்டுள்ளது.
சுமார் 24 மீற்றர் சுற்றளவில் சுமார் 4067 முதல் 4206 மீற்றர் வரை எரிவாயு படிமம் இருப்பதாக கெய்ன் லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. அங்கு எண்ணெய் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கப்பல் எரிவாயு காணப்படும் குறித்த இடத்தை சென்றடைய வுள்ளது. இந்த இரண்டாவது எரிவாயு படிமத்தின் வர்த்தக ரீதியான பெறுமதியை சரிவர தெரிந்து கொள்வதற்கு அகழ்வு வேலைகள் இன்னமும் தொடர வேண்டியுள்ளது.
இயற்கை எரிவாயு இருப்பதாக கெய்ன் லங்கா நிறுவனம் கடந்த ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு அறிவித்திருந்தது. இந்த இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப் பட்டதன் ஊடாக எண்ணெய் வளம் இருப்பதற்கான பலமான சான்றும் இருப்பதாகவும் கெய்ன் லங்கா நிறுவனம் சுட்டிக்காட்டியிருந்ததாக ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... |
|---|
இலங்கையில் இரண்டாவது எரிவாயு வளம் கண்டுபிடிப்பு