சென்னை கோட்டூர்புரம் ரிவர்வியூ சாலை விரிவாக்கம் தொடர்பாக சென்னை பெருநகர மேயர் சைதை துரைசாமி, முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இடையே மோதல் வலுத்துள்ளது.
சென்னை கோட்டூர்புரம் ரிவர்வியூ சாலை வெள்ள அபாயம் உள்ள பகுதி. இங்குள்ள 30 அடி சாலை 60 அடிசாலையாக மாற்றப்பட்டு பூங்காவும் அமைக்கப்பட்டு உள்ளது. இது அந்த பகுதியில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு கட்டி வரும் 18 மாடி குடியிருப்பின் மதிப்பை அதிகரிப்பதற்காக தான் என்பது தெரிய வந்துள்ளது.
எனவே "மேயராக இருந்த மா. சுப்பிரமணியன் மீது நடவடிக்கை எடுக்கும்படி முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இந்த மன்றம் கோரிக்கை வைக்கிறது"என்று மேயர் சைதை துரைசாமி மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பாக முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில்," கோட்டூர்புரம் ரிவர்வியூ சாலை 8 வீடுகள் கொண்ட முட்டுச் சந்து என்று சைதை துரைசாமி கூறியுள்ளார். அது முட்டுச் சந்து இல்லை. இரண்டரை கிலோ மீட்டர் தூரம் கொண்ட சாலையாகும்.
அந்தச் சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் போய் வருகின்றனர். பொதுப்பணியின் துறையின் ஒப்புதலுடன் அங்கு பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவுக்கு வருவோரின் வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு இந்தச் சாலை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து வேறு எந்தத் தனிப்பட்ட ஒருவருக்காகவும் அந்தச் சாலை விரிவாக்கம் செய்யப்படவில்லை. மொத்தம் 11 லட்சத்துக்கு 39 ஆயிரம் ரூபாய் செலவில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.
இந்தச் சாலை போல மியூசிக் அகாதெமி சாலை, செனடாப் சாலையையும் விரிவுபடுத்தியிருக்கிறோம். இந்தச் சாலைகளை தனிப்பட்ட ஒருவருக்காக விரிவாக்கம் செய்தோம் என்று சொல்ல முடியுமா?
இது தொடர்பாக மேயர் சைதை துரைசாமி ஏற்கெனவே ஒரு முறை குற்றம்சாட்டினார். பதில் அளித்தேன்.ஆனாலும் அவதூறாக என் மீது தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறார். எனவே அவர் மீது வழக்கு தொடர உள்ளேன் என்று முன்னாள் மேயர் சுப்பிரமணியன் கூறினார்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
வலுக்கிறது: சென்னை மேயர் - முன்னாள் மேயர் மோதல்