"உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது". "தானே" புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட பகுதிகளை கடந்த மாதம் 4ந் தேதி கடலூரில் உலங்கு வாகனத்தில் இருந்தவாறே பார்வையிட்டு, பின்னர் நிவாரண உதவிகளை வழங்கி மக்களுக்கு ஆறுதல் சொன்ன முதல்வர் ஜெயலலிதா, பின்னர் தனது உரையில் இப்படி தான் குறிப்பிட்டார்.
இதற்கேற்ப நேற்று சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின் போது, சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சிற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, பிப்ரவரி 4-ம் தேதி எனது பதில் உரையில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு நிவாரண உதவிகளை அறிவிக்க உள்ளோம். எதிர்க்கட்சித் துணைத் தலைவரே அசந்து போகும் அளவுக்கு அறிவிப்புகள் வெளிவரக் காத்திருக்கின்றன என்றார்
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில், " புயல் பாதித்த மாவட்டங்களில் வழங்கப்பட்ட நிவாரண உதவிகள் போதுமானதாக இல்லைபாதிக்கப்பட்ட பகுதிகளில் குறுகிய மற்றும் நீண்ட காலத் திட்டங்களின் அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தனி இயக்குநரகத்தை ஏற்படுத்த வேண்டும். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வங்கிகள், நிதி நிறுவனங்கள் மூலம் கடனுதவி அளிக்க வேண்டும்.
புயலால் பதிப்பினை களைவதற்காக தனித்துறை ஒன்றினை ஏற்படுத்தி அத்துறை முதல்வரின் பார்வையில் செயல்பட வேண்டும். . முந்திரி, பலா போன்றவைகளின் சேதத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் போக்க நீண்ட காலத் திட்டங்களை வகுக்க வேண்டும் என்றார்.
இது குறித்து பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, "ஏழ்மை அதிகமுள்ள ஒரு நாட்டில் எவ்வளவு வழங்கினாலும் போதாது. வழங்கப்பட்ட நிதி உதவிகள் போதவில்லை எனச் சொல்வது எளிது. நிவாரண உதவிகளைப் பொருத்தவரை, சேதம் அடைந்த மற்றும் பகுதி அளவு சேதம் அடைந்த குடிசைகளுக்கு முற்றிலும் நிவாரண நிதி தரப்பட்டு விட்டது. பாதிக்கப்பட்ட ஓட்டு வீடுகளுக்கும் நிவாரண நிதி அளிக்கப்பட்டுள்ளது. கான்கிரீட் வீடுகளை வைத்திருப்பவர்கள் தங்களுக்கும் நிவாரண நிதி வேண்டும் எனக் கூறுகிறார்கள்.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் தெரிவித்த அனைத்து ஆலோசனைகளையும் ஏற்கெனவே பேசி முடிவெடுத்து விட்டோம். யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கான அறிவிப்புகள், பிப்ரவரி 4-ம் தேதி எனது பதில் உரையில் தெரிவிக்கப்படும். எதிர்க்கட்சித் துணைத் தலைவரே அசந்து போகும் அளவுக்கு அறிவிப்புகள் வெளிவரக் காத்திருக்கின்றன என்றார் முதல்வர் ஜெயலலிதா.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
புயல் பாதிப்பு நிவாரணத்தில், பிப்ரவரி 4-ல் அசத்தப்போகும் அறிவிப்புகள்: முதல்வர்