தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாமீது அவதூறு பரப்பிய விஜயகாந்த்மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக வழக்குரைஞர்கள் சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றியத்தின் அதிமுக சிறுபான்மைப் பிரிவு தலைவரும், உச்ச நீதிமன்ற வழக்குரைஞருமான வி.ஞானமுத்து, வழக்குரைஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் மீது புகார் மனு ஒன்று கொடுத்துள்ளனர்.
இந்தப் புகார் மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
"தேமுதிக தலைவர் விஜயகாந்த், கடந்த 2ஆம் தேதி கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர், முதலமைச்சரின் ஆட்சிக்கும், புகழுக்கும், மாண்புக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக பேசினார்.
மேலும், முதலமைச்சர் மீது அவதூறு பரப்புவதோடு, தமிழகத் தின் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், வதந்தி பரப்பும் உள்நோக்கத்தோடும், கெட்ட எண்ணத்தோடும் பேசினார். எனவே தமிழகத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிய விஜயகாந்த் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்."
மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
இப்புகார் மனுவின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்வது தொடர்பாக காவல்துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டால், விஜயகாந்தைக் காவல்துறை கைது செய்யும் என கூறப்படுகிறது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
விஜயகாந்த் மீது முதல்வரை அவதூறு கூறியதாக புகார் மனு!