தமிழகத்தில் வரலாறோ, பூகோளமோ இதுவரை காணாத மின் தடை நடைமுறையிலுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
அதிமுக ஆட்சி அமைந்து 8 மாதங்களாகியுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் மின்வெட்டு வரைமுறையின்றி இருப்பதாக ஆங்காங்கே பொதுமக்களின் அதிருப்திப் பேச்சுகள் நிலவுகின்றன.
தலைநகர் சென்னை மட்டுமே பெருமளவு மின்வெட்டிலிருந்து தப்பியுள்ளது. அது தவிர்த்து தமிழகத்தின் பிற பகுதிகளில் வரலாறு காணாத மின்வெட்டு நிலவுகிறது. சென்னையிலும் 1 மணி நேரம் மின்வெட்டு என்று சொன்னாலும், அறிவிக்கப்படாமல் கூடுதலாக அரை மணி அல்லது 1 மணிநேரத்துக்கு மின் வெட்டு நிலவுகிறது.
கடந்த திமுக ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் சென்னையில் 1 மணி நேரமும், ஊரகப் பகுதிகளில் 3 மணி நேரமும் மின்வெட்டு நிலவியது. இதனால் மக்கள் பாதிப்புக்கும் வெறுப்புக்கும் ஆளாகிவிட ஆட்சி மாற்றத்துக்கு பிரதான காரணமாக மின்வெட்டு அமைந்தது.
ஆட்சி மாறிவிட்ட நிலையிலும் கோவை, ஈரோடு, காஞ்சிபுரம் போன்ற தொழில்வளம் மிக்க மாவட்டங்கள் இந்த மின்வெட்டு காரணமாக கடும்பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
கிராமப் புறங்களிலோ சில பகுதிகளில் 6 மணி நேரம், சில மாவட்டங்களில் 8 மணி நேரம், சில நாட்களில் 12 மணி நேரம் கூட மின்வெட்டு நிலவுகிறது.
மழைக்காலங்களில் கூட மின்வெட்டு இருப்பது ஆச்சரியத்தையும் ஆதங்கத்தையும் அளித்துள்ளது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் மழைக் காலங்களில் மின்சாரம் இடையில் தட்டுப்பாடடையாமல் வெட்டப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பள்ளி மாணவர்களின் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடக்கும் இந்தத் தருணத்தில் மின்சாரம் அடியோடு இல்லாமல் போவதால் மாணவர்கள் பெரிதும் சிரமத்திற்காளாகியுள்ளனர்.
சென்னை தவிர்த்த பிற பகுதிகளில் இன்றிலிருந்து அதிகாரப்பூர்வமாகவே 8 மணி நேர மின்தடையை நடைமுறைப்படுத்த மின்வாரியம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. நகரம், கிராமம் என்ற பேதமெல்லாம் இந்த மின் தடைக்குக் கிடையாதாம்.
சில பகுதிகளில் காலை 9 மணி முதல் 12, மாலை 3 முதல் 6, இரவு 7 முதல் 8, மற்றும் 9 முதல் 10 என, 8 மணி நேரம் மின் தடை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இன்னும் சில பகுதிகளில் காலை 6 முதல் 9 மணி வரை, 3 மணி நேரமும்; பகல் 12 முதல் மாலை 3 மணி வரை, 3 மணி நேரமும்; மாலை 6 முதல் இரவு 7 மணி வரை மற்றும் 8 முதல் 9 வரை, தலா 1 மணி நேரம் என, மொத்தம் 8 மணி நேரமும் மின் தடை இருக்கும்.
இந்த மின்வெட்டால் தொழிற்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியின் இறுதி நாள்களில் போடப்பட்ட மின் திட்டங்கள் பலனளிக்க இன்னும் ஓரிரு வருடங்கள் ஆகலாம் என்று தெரிகிறது. அதுவரை?
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
தவிக்கும் தமிழகம்: கடும் மின்வெட்டு!
Comments
Jayalalitha promised that SHE WILL MAKE OUR STATE AS POWERLESS STATE. But people misunderstand in another way.
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed