தமிழ்நாடு மின்சார வாரியம் இப்போது ரூ. 40 ஆயிரம் கோடி இழப்பில் செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் சுமார் ரூ. 8,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதை ஈடுசெய்ய மின் கட்டணத்தை உயர்த்துவது அவசியம் என்று மின்வாரியம் முடிவு செய்தது.
இந்த நிலையில் பொதுமக்களிடம் நேரடியாக கருத்து கேட்கும் வகையில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் மின் கட்டணம் உயர்வு குறித்த மக்கள் கருத்து அறியும் கூட்டம் நடத்துவதாக ஆணையம் அறிவித்தது. அதன்படி முதல் கட்டமாக சென்னையில் கடந்த வாரம் மக்கள் கருத்து அறியும் நிகழ்ச்சி நடந்தது.
இந்நிலையில் மின்சார கட்டணம் உயர்த்துவது குறித்து திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் எழுந்து நின்று திடீரென ஆர்ப்பாட்டமும், ஆணையத்திற்கு எதிராக கோஷமும் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டோர் இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது, மின் கட்டணம் உயர்த்தக்கூடாது, என்றும் குரல் எழுப்பினர். மின்சாரம் முறையாக விநியோகம் இல்லாமல் சிரமப்படுகிறோம் இந்நேரத்தில் கட்டணத்தை உயர்த்துவது நியாயமா என்றும், மேலும் இந்த கூட்டம் கருத்து கேட்பு கூட்டமாக நடக்கவில்லை என்றும் குறை கூறினர்.
தமிழ்நாடு விவசாய சங்கம், பாரதிகிஷன் சங்கத்தினர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்த எதிர்ப்பை பதிவு செய்தனர். பின்னர் தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தனர். விவசாய அமைப்பினர் திடீரென எழுந்து கோஷம் போட்டதால் பரபரப்பும், பதட்டமும் நிலவியது.
கூட்டத்தில் பேசிய மின்துறை நிதி செயலர் ராஜகோபால் பேசுகையி்ல் ; இலவச மின்சாரம் வழங்குவது தொடர்பாக அரசுக்கு 6 ஆயிரம் கோடி இழப்பீடு ஆகிறது என்றார். இதற்கு விவசாய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தவறான தகவல் என்றும் , கூறினர். இதனால் விவசாய அமைப்பினர் ஆவேசமுற்று கோஷம் போட்டதால் கூட்டத்தில் கூச்சல் – குழப்பம் ஏற்பட்டது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
மின் கட்டண உயர்வு - திருச்சியிலும் கூச்சல் - குழப்பம்!