திருமணம் முடித்துச் சென்ற பின்னரும் தனக்குப் பாலியல் தொல்லை தந்து வந்த பெற்ற தந்தையின் கொடுமையினைப் பொறுக்க முடியாமல் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ஆக்கனூரைச் சேர்ந்தவர் பிச்சைபிள்ளை. 42 வயதாகும் இவருக்கு மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகள் ஜான்சிராணிக்குக் கடந்த ஆண்டு திருமணம் முடிந்தது.
இந்நிலையில் திடீரென ஜான்சிராணி விஷயமருந்திய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருச்சி அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட சிகிட்சையில் பலனின்றி கடந்த 7 ஆம் தேதி ஜான்சிராணி மரணமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து தன் மருமகனின் வரதட்சணை கொடுமை தாங்கமுடியாமல்தான் தன் மகள் தற்கொலை செய்து கொண்டதாக பிச்சை பிள்ளை கொடுத்த புகாரின் அடிப்படையில் மங்களமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
ஜான்சிராணியின் மரணம் தொடர்பாக நடந்த தொடர் விசாரணைகளில் அவரின் தந்தை பிச்சை பிள்ளை மற்றும் தாய் அமுதா மீது காவல்துறையினருக்குச் சந்தேகம் எழுந்தது. தொடர் விசாரணையில் அதிர்ச்சியளிக்கும்படியான தகவல்கள் காவல்துறைக்குக் கிடைத்துள்ளது.
ஜான்சிராணி வயதுக்கு வந்த நாள் முதலாக அவரின் தந்தை பிச்சை பிள்ளை தன் மகளென்றும் பாராமல் ஜான்சிராணியினைப் பாலியல் வல்லுறவுக்கு ஈடுபடுத்தியுள்ளார். இதனை அறிந்திருந்த தாய் அமுதாவும் அதற்கு எதிராக எதுவும் செய்யவில்லை. இந்நிலையில், திருமணம் முடித்துக் கொடுக்கப்பட்ட ஜான்சி ராணி தாய் வீட்டிற்கு வரும்போதெல்லாம் பிச்சை பிள்ளை ஜான்சிராணியை வல்லுறவு செய்து வந்துள்ளார். இதனால் ஜான்சிராணி தாய் வீட்டிற்கு வருவதையே நிறுத்தியுள்ளார்.
இந்நிலையிலேயே ஜான்சிராணி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். தந்தை தன்னை வல்லுறவுகொண்டது கணவனுக்குத் தெரிய வந்ததால் ஜான்சி ராணி தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் பிச்சை பிள்ளை மற்றும் அமுதாவிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், பிச்சை பிள்ளை தன்னுடைய தனது மற்றொரு மகளையும் பாலியல் வல்லுறவு செய்து வருவது தெரிய வந்துள்ளது. இதையடுத்து பிச்சைபிள்ளையைக் காவல்துறையினர் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். பெற்ற மகள்களைத் தந்தையே சீரழித்த சம்பவம் பெரம்பலூர் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
மகள்களைச் சீரழித்த தந்தை: மகள் தற்கொலை!
Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed