சட்டசபையில் இன்று அ.தி.மு.க- தே.மு.தி.க.வுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஜெயலலிதாவும் - விஜயகாந்தும் விலைவாசி குறித்து நேருக்கு நேர் கடும் விவாதத்தில் ஈடுபட்டனர்.
பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு குறித்து தே.மு.தி.க., உறுப்பினர் சந்திரகுமார் பேசுகையில், இந்த விலையேற்றத்தை உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னர் செய்திருக்கலாமே என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர், விலை உயர்வுக்கு பின்னர்தான் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வருகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டு அமோக வெற்றி பெறும் என கூறினார்.
அப்போது பேசிய தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், "இடைத்தேர்தலில் ஆளும் கட்சி எப்படி வெற்றி பெறும் என்பது பற்றி அனைவருக்கும் தெரியும்" என கூறினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர், "சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிட தயாரா?" கேள்வி எழுப்பினார்.
இவ்வாறு விவாதம் நடந்து கொண்டிருந்த போது சட்டசபையில் இரு தரப்பிலும் கைநீட்டி பேசப்பட்டது. இதனை தொடர்ந்து கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சபாநாயகர் தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்களை கூண்டோடு வெளியேற்ற உத்தரவிட்டார். இதனையடுத்து விஜயகாந்த் உள்ளிட்ட அனைத்து எம்.எல்.ஏ.,க்களையும் சபை காவலர்கள் அவையிலிருந்து வெளியேற்றினர்.
பின்னர் சட்டப்பேரவைக்கு வெளியெ செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், "ஆளுநர் ஆட்சியின் கீழ் சங்கரன்கோவில் இடைத்தேர்தலை நடத்தினால், தனித்து போட்டியிட தயார்" என்றார்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
ஜெயலலிதா - விஜயகாந்த் கடும் விவாதம்: தேமுதிக உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளியேற்றம்!
Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed