கலைஞர் தொலைக்காட்சி குழுமங்களின் தலைவராக பிரபல நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ரமேஷ் பிரபா பொறுப்பேற்றுக் கொண்டதாக கலைஞர் தொலைக்காட்சி நிறுவன செய்திக் குறிப்பில் கூறப் பட்டுள்ளது.
கலைஞர் தொலைக் காட்சி நிறுவன செய்திக் குறிப்பில் ''கலைஞர் தொலைக்காட்சி குழுமங்களின் தலைவராக ரமேஷ் பிரபா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். நிர்வாகம், நிகழ்ச்சிகள், மார்க்கெட்டிங், தொழில் நுட்பம் என அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடிக்கிய ஒட்டு மொத்த நிர்வாகப் பொறுப்பையும் இவர் ஏற்றுக் கொள்வார்.
ஒரு அறிவிப்பாளராக சன் டிவி, கலைஞர் டிவி இரண்டின் தொடக்க காலத்திலிருந்தே இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்ற ரமேஷ் பிரபா தனது காலை நிகழ்ச்சிகளின் மூலமாக இதுவரை 4000க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்களை பேட்டி கண்டு சாதனை படைத்திருக்கிறார்.
கேலக்ஸி குழுமங்களின் தலைவராக இவரது தயாரிப்பு, இயக்கத்தில் `லலிதாவின் பாட்டு க்குப் பாட்டு’ நிகழ்ச்சி 800 வாரங்களைக் கடந்தும், `சக்தி மசாலா சுவையோ சுவை’ நிகழ்ச்சி 700 வாரங்களைக் கடந்தும் தொடர்ந்து வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வருகின்றன.
கலைஞர் தொலைக் காட்சி குழும தலைவராக புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்ட ரமேஷ் பிரபா "எனது திறமை மற்றும் உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து அதை அங்கீகரிக்கும் விதமாக இந்த வாய்ப்பை எனக்கு அளித்த கலைஞர் அவர்களுக்கு எனது நன்றிகள். இது மிகப்பெரிய சவாலான ஒரு பொறுப்புதான். கலைஞர் தொலைக்காட்சியை அதனுடைய இரண்டாமிடத்திற்கு மீட்டுக் கொண்டு வருவது எனது முதல் பணி. பிறகு முதலிடத்தை நோக்கி பயணிப்பது அடுத்த கட்ட லட்சியம்" என்று கூறியதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கலைஞர் தொலைக் காட்சி, இசையருவி, சிரிப்பொலி, கலைஞர் செய்திகள், சித்திரம், முரசு என 6 சேனல்களைக் கலைஞர் தொலைக் காட்சிக் குழுமம் ஒளிபரப்பி வருவது குறிப்பிடத் தக்கது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
கலைஞர் தொலைக் காட்சிக் குழுமங்களின் தலைவராக ரமேஷ் பிரபா பொறுப்பேற்பு!