தமிழக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது காவல்துறையினரை தாக்கியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குத்தாலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கல்யாணத்திற்கும், அதிமுக கிளைச் செயலாளர் மகேஷ்வரனுக்கும் நேரடி கொள்முதல் நிலையத்தில் வாக்குவாதம் நடந்து, பின்னர் கைகலப்பாக மாறியது. இதையடுத்து முன்னாள் எம்.எல்.ஏ கல்யாணம் கைது செய்யப்பட்டு 15 நாள் காவலில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் கல்யாணத்தை சிறையில் சந்திக்க சென்ற. முன்னாள் அமைச்சர் நேரு, திருவாரூர் மாவட்ட தி.மு.க.செயலாளர் பூண்டி கலைவாணன் ஆகியோர்களுக்கும், சிறைக்காவலர் வீரமணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து முன்னாள் அமைச்சர் நேரு மற்றும் அவருடன் வந்தவர்கள், சிறைக்காவலர் வீரமணியை தள்ளிவிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து சிறைக்காவலர் வீரமணி அளித்துள்ள புகாரின் பெயரில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, பூண்டி கலைவாணன், உட்பட 5 பேரின் மீது திருச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இன்று மாலை கே.என்.நேருவின் வீடு மற்றும் அவரது அலுவலகங்களுக்குச் சென்று அவரைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் கே.என். நேரு அங்கே இல்லை என்பதால், அவர் வந்ததாகக் கூறப்படும் காரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
நேரு கைது செய்யப்படலாம் என்று கருதி தொண்டர்கள் நேரு வீட்டு முன் குவிவதால் நேருவின் வீடு மற்றும் அலுவலகங்கள் அருகே காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று திருச்சியில் கே.என்.நேரு மகன் திருமணம், தி.மு.க.தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
கே.என்.நேரு – பூண்டி கலைவாணன் கைதாகிறார்கள்..?