ஆட்சியில் இல்லாத திமுக, முல்லை பெரியாறு பிரச்சனையில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது கேலிக்கூத்தானது என அமைச்சர் ராமலிங்கம் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் அதிமுக மற்றும் தேமுதிகவினரிடையே நடந்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து, அவையில் அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் 10 நாட்களுக்கு அவை நடவடிக்கையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதனைப் பல கட்சிகளும் கண்டித்துள்ள நிலையில், திமுக தலைவர் கருணாநிதி "இது ஜனநாயக மரபுகளை உடைக்கும் செயல்" என்று கூறினார். இந்நிலையில் அமைச்சர் கே.வி. ராமலிங்கம் ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது,
"பேரவையில் எனக்கு அருகில்தான் விஜயகாந்த் அமர்ந்து இருக்கிறார். பேரவையில் கையை நீட்டி ஆபாசமான வார்த்தைகளால் பேசியதால்தான் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
விஜயகாந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டது தவறு என்று பல அரசியல் கட்சி தலைவர்கள் பேசி வருகிறார்கள். உரிமைக்குழுதான் விஜயகாந்தை சஸ்பெண்ட் செய்யும் முடிவை எடுத்தது. உரிமைக்குழுவின் முடிவில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை.
திமுக ஆட்சியில் அனைத்து அரசு துறைகளும் சீரழிந்து விட்டன. அதிமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு படிப்படியாக ஒவ்வொரு துறைகளும் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மத்தியில் கூட்டணியிலும், மாநிலத்தில் ஆட்சியிலும் இருந்த திமுக முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சினையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் ஆட்சியில் இல்லாத நேரத்தில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது கேலிக்கூத்தானது."
என்று கூறினார்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
திமுக பொதுக்குழு தீர்மானம் கேலிக்கூத்து: அமைச்சர்!