2ஜி அலைக்கற்றையை ஏலம் விட்ட விவகாரத்தில் சிறை சென்ற முன்னாள் அமைச்சரும் திமுக தலைவர்களுள் ஒருவருமான ஆ.ராசா வெற்றிகரமாக முதலாமாண்டை நிறைவு செய்துள்ளார்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஏலத்தை தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்வதில் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா பதவி வகித்த போது பகிரங்க ஏலம் முறையைப் பின்பற்றாமல், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையை பின்பற்றினார். இவ்வகையில் நாட்டுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திவிட்டார் என்று மத்திய கணக்கு தணிக்கைக் குழு ராசா மீது குற்றம்சாட்டியிருந்தது
இது தொடர்பான மத்திய புலனாய்வுத் துறை விசாரணையில், ராசா பண ஆதாயம் பெற வேண்டி இத்தகைய நடவடிக்கை மேற்கொண்டதாக முறையீடு செய்யப்பட்டது.
ராசா பதவி காலத்தில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள் திமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான கலைஞர் டிவிக்கு பல நூறு கோடி “கடன்” கொடுத்து திரும்பப் பெற்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இதே வழக்கில் பின்னர் திமுக தலைவர் கருணாநிதி மகள் கனிமொழியும் இதே திகார் சிறையில் அடைக்கப்பட்டார். கனிமொழியும் ராசாவும் கூட்டு சேர்ந்து சதி செய்தனர் என்பது தான் முறையீடு. கனிமொழி இப்போது பிணையில் விடுதலையாகிவிட்டார்.
மற்றவர்களும் கூட வெளியே வந்து விட்டனர். இருப்பினும் ராசா மட்டுமே தன்னந்தனியாக திகாரில் இருந்து வருகிறார். அவர் இதுவரை பிணை கோரி விண்ணப்பிக்காதது ஏன் என்பதும் அரசியல்வட்டாரங்களில் மர்மமாகவும் பெரும் கேள்வியாகவும் உள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டவர்களும் கனிமொழி இருந்தவரை திஹார் சென்று பார்த்துவந்தனர். இப்போது ஆ.ராசாவை அவரது மனைவியைத் தவிர வேறுயாரும் சென்று பார்ப்பதில்லை என்று கூறப்படுகிறது. ராசா எப்போது வெளியே வருவார், இந்த வழக்கு என்னவாகும் என்று அரசியல் நோக்கர்கள் கூர்ந்து கவனித்துவருகின்றனர்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
2ஜி ஊழலில் சிக்கிய ஆ.ராசாவுக்குத் திஹாரில் முதலாமாண்டு நிறைவு!
Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed