இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: தமிழகம் திமுக இளைஞர் அணி சலூனில் தொடங்கப்பட்டது! - மு.க.ஸ்டாலின்

திமுக இளைஞர் அணி சலூனில் தொடங்கப்பட்டது! - மு.க.ஸ்டாலின்

புதுக்கோட்டை  மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் தேர்வு தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் நேர்காணலை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க.வின் துணை அமைப்புகளில் இளைஞர் அணி ஒன்றாக இருக்கிறது.இந்த அணி முதன்முதலில் 1980-ஆம் ஆண்டு மதுரை ஜான்சி ராணி பூங்காவில் கலைஞரால் தொடங்கப்பட்டது. கடந்த 1967-68 ஆம்  ஆண்டுகளில் நான்  பள்ளியில்  படிக்கும் காலத்தில் எனக்குரிய நண்பர்கள் சிலரடன் ஒன்று சேர்ந்து கோபாலபுரம் இளைஞர் தி.மு.க.மன்றம் என்ற மன்றத்தை தொடங்கினேன்.

கலைஞர் குடியிருக்கும் கோபாலபுரம் வீட்டருகில் இருக்கும் முடிதிருத்தும் கடையில் தொடங்கினோம்.இந்த மன்றத்தின்  மூலம் அண்ணா மற்றும் கருணாநிதி  பிறந்த நாள் விழா,பொங்கல் விழா போன்ற விழாக்களை நடத்தினோம்.இது படிப்படியாக உயர்ந்து முறையாக 1980 ஆம் ஆண்டு தொடங்கி 1982 இல் இளைஞர் அணியை உருவாக்குவது குறித்தும், இந்த அணியை எப்படி மாற்றுவது என்பது குறித்தும் திருச்சியில் கலந்தாய்வு நடந்தது.

இதற்காக 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் நானும் ஒருவனாக இருந்து ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுபயணம் செய்து தமிழ்நாடு முழுவதும் இளைஞர்  அணியை  உருவாக்கி தந்தோம்.

திமுக இளைஞர் அணி இப்போது கம்பீரமாக தலை நிமிர்ந்து நிற்கிறது. தி.மு.க.வில் எத்தனையோ  அணிகள் இருந்தாலும் முதலிடத்தில் இளைஞர் அணிதான் உள்ளது. நான் இவ்வாறு கூறுவதால் மற்ற அணி பொறுப்பாளர்கள் கோபப்பட மாட்டார்கள்.ஏனெனில் உண்மைநிலை அதுதான்.எனவே  நாம் இந்த  அணியை  இன்னும் முறையாக செயல்படுத்தவே இந்த நேர்காணல் நடைபெறுகிறது. இதற்கு  முன்னதாக மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்த 90-95% நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வந்தனர். இதில் சிபாரிசுகள் இருந்து வந்தது.

ஆனால்,இப்போது யாருடைய சிபாரிசும் இருக்க கூடாது என்பதால்தான்  இந்த நேர்காணல் நடைபெறுகிறது. அதற்காகவே வயது வரம்பை குறிப்பிட்டுள்ளோம்.

கடந்த  1937-இல்  இந்தி எதிர்ப்பு ஆரம்பித்தது. இதன் உச்சகட்டமாக 1965-இல் போராட்டம் நடந்தது.அப்போது மாணவர்கள் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து போராடினர்.திமுக ஆட்சிக்குவர இதுவும் காரணமாக இருந்தது.இன்று அந்த உணர்வு இல்லை.காரணம் தற்போதுமாறிவரும் சூழல்.

அறிவாலயத்தில் தலைவர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாக ஒரு மாவட்ட ஒன்றிய அமைப்பாளர் ஒருவர் சந்தித்தார்.அவர் தன்னை இளைஞரணி அமைப்பாளர் என்று தெரிவித்தபோது, உங்கள் வயதென்ன என்று கருணாநிதி  கேட்டதற்கு 55 என்று குறிப்பிட்டார். உடனே கருணாநிதி என்னை பார்த்தார். எனவே  இப்படிபட்ட நிலை மாறவேண்டும் என்பதற்காகத்தான் 30 வயதுள்ளவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: