குடியிருப்பு பகுதிகளில் கண்காணிப்பு கேமரா!

காரைக்கால் (11 ஜன 2017): குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளை தடுக்க, குடியிருப்பு பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துங்கள் என போலீசார்-பொதுமக்கள் நல்லுறவு கூட்டத்தில், போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காரைக்கால் பச்சூர், தருமபுரம் பகுதி பொதுமக்கள் மற்றும் சங்க நிர்வாகிகளுடன், நகர காவல்நிலைய போலீசார் நல்லுறவு கூட்டம் நடத்தினர். கூட்டத்தில் பேசிய பொதுமக்களின் பலர், இரவு நேர காவலர் ரோந்தை அதிகரிக்கவும், வீதிகளில் உள்ள மின் விளக்குகளை பராமரிக்கவும், சாலைகளில் போக்குவரத்தை சீர்படுத்தவும், வீதிகளில் சந்தேகம் படும்படியான நபர்கள் சுற்றும் போது, காவலர்களே நிறுத்தி விசாரணை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தினர்.

தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் பாலச்சந்தர் பேசியதாவது:

"நாம் வசிக்கும் குடியிருப்புப் பகுதியை எப்போதும் தூய்மையாக வைத்திருக்கவேண்டும். சந்தேகப்படும்படியான நபர்கள் குறித்து உடனடியாக காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவேண்டும். வீடு வாடகைக்கு கொடுக்கும்போது, வாடகைக்கு வருவோர் குறித்த அனைத்து விவரங்களையும் சேகரிக்கவேண்டும். குறிப்பாக அடையாள அட்டை உள்ளிட்ட நகல் பெற்றிருக்கவேண்டும். முடிந்தால் அதன் ஒரு காப்பியை அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு வழங்கவேண்டும். குடியிருப்பு பகுதி மற்றும் முக்கிய இடங்களில் தெரு சார்பில் கண்காணிப்பு கேமரா பொருத்த முன்வரவேண்டும்" என்றார்.