சசிகலா - ஓ.பி.எஸ், இவர்களுக்கு மத்தியில் தம்பித்துரை!

புதுடெல்லி(11 ஜன 2017): சசிகலாவும், முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் மாறி மாறி டெல்லிக்கு கடிதம் எழுதிவரும் நிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பாக தம்பித்துரை கருத்து தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு ஜல்லிக்கட்டு கட்டாயம் நடைபெறும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதமும் எழுதியுள்ளார்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ஜல்லிக்கட்டின்போது காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை என்றும், இந்த வார இறுதியில் பொங்கல் நடக்க உள்ளதால் அவசரச் சட்டம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், காளைகளை காட்சிப் பட்டியலிலிருந்து நீக்க அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும், தமிழக பாரம்பரிய கலாசாரத்தை காக்க ஜல்லிக்கட்டுத் தடையை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே இன்று காலை தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்பிக்கள், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் அனில் மாதவ் தவேவை டெல்லியில் இன்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தம்பித்துரை, கோரிக்கை வைத்துள்ளோம், நல்ல முடிவை மத்திய அரசு தெரிவிக்கும் என்றார்.

இப்படி அதிமுகவில் ஆளாளுக்கு கடிதம் எழுதுவதும், மனு கொடுப்பதும் தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக அதிமுகவின் தலைமையும், ஆட்சித் தலைமையும் ஒருவரிடம் இருக்க வேண்டும் என்று தம்பித்துரை கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.