சிவகங்கை அருகே என்கவுண்டர்: பிரபல ரவுடி சுட்டுக்கொலை!

Wednesday, 11 January 2017 16:55 Published in தமிழகம்

சிவகங்கை(11 ஜன 2017): சிவகங்கை அருகே பிரபல ரவுடி கார்த்திகை சாமி காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியை சேர்ந்த வர் கார்த்திகைசாமி (வயது 26). இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் நகை பறிப்பு, வழிப்பறி, கொள்ளை, மிரட்டல் செய்த தாக 22 வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் நேற்று கார்த்திகைசாமி தனது ஆதர வாளர்களுடன் மதுரைக்கு காரில் சென்றார். மதுரை மாவட்டம், கூடக்கோவில் போலீஸ் சரகம், எலியார்பத்தியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் காருக்கு டீசல் போட்டுள்ளார். அப்போது பங்க ஊழியரான மதுரை கைத்தறி நகரை சேர்ந்த நாகராஜன் என்பவருடன் அந்த கும்பல் தகராறு செய்தது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திகை சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நாகராஜனை சரமாரியாக அடித்து உதைத்தனர். ரத்த வெள்ளத்தில் அவர் அங்கு மயங்கி விழுந்தார். பின்னர் அந்த கும்பல் பெட்ரோல் பங்கை அடித்து நொறுக்கி விட்டு தப்பியது.

இதையடுத்து கார்த்திகை சாமி உள்பட 6 பேரை போலீஸார் தேடி வந்தனர். தனிப்படை விசாரணையில் சிவகங்கை அருகே அவர்கள் பதுங்கியிருந்ததாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இரவு போலீஸார் அங்கு முற்றுகையிட்டனர்.

அப்போது கார்த்திகை சாமி வீச்சரிவாளால் தாக்கியதில் காவலர் வேல்முருகன் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. போலீஸார் குறைந்த அளவில் போனதால் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திரும்பி விட்டனராம். வேல்முருகனை மருத்துவமனையில் சேர்த்த பின்னர் கூடுதல் போலீஸாருடன் மீண்டும் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

புதுக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் நைனாங்குளம் பாலம் அருகே பதுங்கியிருந்த கார்த்திகை சாமியை போலீஸார் பார்த்துப் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் மீண்டும் தாக்க முற்பட்டதால் போலீஸார் தற்காப்புக்காக சுட்டுள்ளனர். அதில் குண்டுக்காயம் பாய்ந்து இதில் கார்த்திகை சாமி இறந்தார். மேலும் தப்ப முயன்ற கூட்டாளிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்

இச்சம்பவம் சிவகங்கை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rawdy Kanthigai samy encountered by police near Sivagangai 

Last modified on Wednesday, 11 January 2017 16:58
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.