பூரண மதுவிலக்கை அமல்படுத்த தீர்மானம்

காரைக்கால் (11 ஜன 2017): குஜராத், பிகாரைப்போல, தமிழகம், புதுச்சேரியில் பூரண மதுவிலகை அமல்படுத்தவேண்டும் என காரைக்கால் அனைத்து சமய, சகோதர நல்வாழ்வுச் சங்கம் தீர்மானம் இயற்றியுள்ளது.

காரைக்கால் மாவட்ட அனைத்து சமய, சகோதர நல்வாழ்வுச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம், காரைக்கோயில்பத்து சீமான் சுவாமிகள் மடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, சங்க கௌரவத் தலைவர் தண்டாயுதபாணி தலைமை வகித்தார். புதுச்சேரி மாநில சங்க நிறுவனத் தலைவர் அந்தோணிசாமி அடிகளார், காரைக்கால் மாவட்டத் தலைவர் வேதாச்சலம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

கூட்டத்தின் முடிவில், நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். காரைக்காலில் விவசாயம், குடிநீர் தேவைக்கென நிலத்தடி நீர் அதிகமாக எடுக்கப்படுகிறது. இதனால் எதிர் காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நதி நீரை தேக்கும் வகையில் காரைக்காலின் அனைத்து தொகுதிகளிலும் புதிய ஏரிகள் வெட்டவும், ஏற்கெனவே உள்ள நல்லம்பல் ஏரியை பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். பருவமழை பொய்த்துப் போனதால் விவசாயம் பாதிக்கப்பட்டதால், அண்டை மாநிலங்களில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துவருகின்றனர். இந்நிலை, காரைக்காலில் துவங்கும் முன், விவசாயிகள் மற்றும் விவசாயத்தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணத்தை, இடைத்தரகர் இன்றி பாசனதாரர்கள் மூலம் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஏராளமான இளைஞர்கள் இன்று மதுப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். இப்போக்கை முற்றிலும் தடுக்கும் வகையில் குஜராத், பிகார் மாநிலங்களைப் போன்று தமிழகம், புதுவையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். அதற்கு முன்னதாக, மதுக்கடைகள் இயங்கும் நேரத்தை குறைக்கவேண்டும். பிறகு மதுக்கடைகள்ளின் எண்ணிக்கையை குறைக்கவேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டு, மாவட்ட கலெக்டர் மற்றும் முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.