மின்சாரம் தாக்கி பெண் பலி!

Thursday, 12 January 2017 01:01 Published in தமிழகம்

காரைக்கால் (11 ஜன 2017): காரைக்காலில் பொங்கல் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, மின்சாரம் தாக்கி பெண் பலியானார். அவரைக்காப்பாற்ற சென்ற தாய், படுகாயத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாகை மாவட்டம் கீச்சாங்குப்பத்தில் வசிப்பவர் சீத்தாராமன். இவரது மனைவி பிரியதர்ஷினி (32). இவர் காரைக்கால் அருகே உள்ள கிளிஞ்சல்மேடு கிராமத்தில் நடைபெறும் கோயில் விழாவில் கலந்துகொள்வதற்காக, கிளீஞ்சல்மேட்டில் உள்ள தனது தாய் வீட்டுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு வந்தார். இவருக்கு திருமணமாகி 4 மாதங்கள் ஆகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி, நேற்று முன்தினம் வீட்டை சுத்தம் செய்யும் பணியில் பிரியதர்ஷினி மற்றும் அவரது தாய் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மின்சாரம் பாய்ந்துகொண்டிருந்த கிரைண்டரை தெரியாமல் சுத்தம் செய்தபோது, தூக்கி வீசிப்பட்டார். மகளின் அலறல் சப்தம் கேட்டு, அவரை காப்பாற்ற சென்ற அவரது தாய் புஷ்பவல்லி (56) கீழே தள்ளப்பட்டு காயமடைந்தார்.

அருகில் குடியிருந்த உறவினர்கள், இருவரையும் காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பிரியதர்ஷினியை பரிசோதித்த மருத்துவர்கள், பிரியதர்ஷினி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். புஷ்பவல்லி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரைக்கால் நகர காவல்நிலைய போலீஸார், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். பிரியதர்ஷினிக்கு திருமணமாகி 4 மாதங்களாகும் நிலையில், தாசில்தார் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Last modified on Thursday, 12 January 2017 01:03
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.