மத்திய அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!

சென்னை(20 ஏப் 2017): இன்னொரு இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு வித்திட வேண்டாம் என தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மத்திய அரசை எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சிகளை ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே மத்திய பா.ஜ.க. அரசு மேற்கொண்டு வருகிறது. இந்திய மண்ணில் பல மதத்தை சார்ந்தவர்களும், பல மொழிகளை பேசுவோரும் ஒன்றுபட்டு வாழ்ந்து வருகிறார்கள். இதற்கு வேட்டு வைக்கும் வகையில், இந்தி-சமஸ்கிருத திணிப்பு முயற்சிகளை பா.ஜ.க. அரசு மேற்கொள்கிறது.

அதன் ஒரு பகுதியாக மத்திய மந்திரிகள் உள்ளிட்டோர் இந்தியில் பேசவோ, எழுதவோ தெரிந்திருந்தால் தங்களது உரையையும் அறிக்கையையும் இந்தியில்தான் கொடுக்க வேண்டும் என்கிற பாராளுமன்ற குழுவின் பரிந்துரைக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்தின் கிராமப்புற மாணவர்களுக்கு விலக்கு அளிக்க செய்யும் தமிழக அரசின் மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற முனைப்பு காட்டாத மத்திய அரசு, இந்தியில் உரையாற்றவும், அறிக்கை வெளியிடவும் இத்தனை வேகம் காட்ட வேண்டிய அவசியம் ஏன்?.

விமான நிலைய அறிவிப்புகள், பத்திரிகை விளம்பரங்கள் என பலவற்றிலும் இந்தியை பரவ செய்யும் அம்சங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்திருப்பதுடன், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம் என்ற நிலையும் உருவாக்கப்பட்டுள்ளது. அரசு திட்டங்களுக்கான பெயர்கள் அனைத்தும் இந்தி அல்லது சமஸ்கிருதத்திலேயே சூட்டப்படுகின்றன.

இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என்கிறது அம்பேத்கர் வகுத்து தந்த அரசியல் சட்டம். ஆனால், இந்தி மொழிக்கு மட்டும் முதலிடம் கொடுத்து, மற்ற மொழிகள் பேசும் இந்திய மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியிருப்பது கண்டனத்திற்குரியது.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் இணைப்பு மொழியான ஆங்கிலத்தை அகற்றிவிட்டு, இந்தியில் எழுதும் வேலையை மேற்கொண்ட மத்திய அரசு, பாராளுமன்றம் தொடங்கி, பள்ளிகள் வரை இந்தி மொழியை திணிக்க ஜனாதிபதி ஒப்புதலை பெற்றிருப்பது இந்தியாவில் பிறமொழி பேசும் மக்களுக்கு செய்கிற வஞ்சக செயலாகும்.

டெல்லி மேல்-சபையில் அண்ணா 1962-ம் ஆண்டு உரையாற்றிய காலம் தொடங்கி, தலைவர் கருணாநிதி பலமுறை வலியுறுத்தி வருவதுபோல, இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கொள்ளும் இந்தி திணிப்பை உடனடியாக கைவிட வேண்டும். தாய்மொழி மீது இன்னொரு மொழி ஆதிக்கம் செலுத்துவதை 1938-ம் ஆண்டு முதலே எதிர்த்து நின்று வெற்றி கண்டது தமிழகம். மொழி போராட்டத்தை முன்னெடுத்து உயிர்த்தியாகம் செய்த வீர வரலாறு திராவிட இயக்கத்துக்கு உண்டு. எனவே இந்திய தேசத்தை இந்தி தேசமாக்கி இன்னொரு இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு மீண்டும் வித்திட வேண்டாம்.

இவ்வாறு ஸ்டாலின் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.