யார் காரணம்? பன்னீர் செல்வத்தை விளாசிய அமைச்சர்!

சென்னை(19 அக் 2017): ஓபிஎஸ் கூறுவதுபோல தினகரன் குடும்பத்தை ஒதுக்கி வைத்தது அவரின் முயற்சியல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க- அம்மா அணியிலி ருந்து சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவைத்ததாக அறிவித்தது, முதல்வர் பழனிசாமி அணி. சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கிவைத்துள்ளதை வரவேற்ற பன்னீர்செல்வம், 'நாங்கள் நடத்திய தர்மயுத்தத்துக்குக் கிடைத்த முதல் வெற்றி இது' என்றார்.

இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு அமைச்சர் ஜெயக்குமார் இன்று அளித்த பேட்டியில், 'சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை கட்சியில் இருந்து ஒதுக்கிவைத்ததற்கும் பன்னீர் செல்வத்துக்கு எந்த தொடர்பும் இல்லை. இப்படியிருக்க அவர்தான் காரணம் போன்று பேட்டி கொடுத்து வருகிறார்.

விட்டால் அமெரிக்காவில் ட்ரம்ப்பின் வெற்றிக்கே நான்தான் காரணம் என்றுகூட பன்னீர்செல்வம் கூறுவார். கட்சியின் நலன் கருதி அனைவரும் முடிவு எடுத்து ஒதுக்கிவைத்தோம். பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், தினகரன் குடும்பத்தை ஒதுக்கி வைத்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று கூறினார்.