தம்பித்துரை, விஜயபாஸ்கருக்கு எதிராக செந்தில் பாலாஜி திடீர் போராட்டம்!

சென்னை(21 ஏப் 2017): அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.பி.தம்பிதுரையை எதிர்த்து போராட்டம் நடத்தவுள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

ஜெயலலிதா அறிவித்த மருத்துவக்கல்லூரி கட்டடப் பணியைத் தொடங்கவிடாமல் வேறு இடத்துக்கு மாற்ற, தம்பிதுரையும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் முயன்றுவருகிறார்கள்' என்று சொல்லி, வரும் 24-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போலீஸிடம் அனுமதி கேட்டிருக்கிறார், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. இதற்காக காவல்துறையிடம் மனு அளித்துள்ளார்.

கடந்த சட்டசபைத் தேர்தலில், அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி போட்டியிட்டபோது, பண விநியோகப் புகார் எழுந்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது. சில மாதங்கள் கழித்து, ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில், அரவக்குறிச்சிக்கு நடந்த தேர்தலில், செந்தில்பாலாஜி வெற்றிபெற்றார்.

எப்படியாவது அமைச்சராகிவிட வேண்டும் என்கிற செந்தில் பாலாஜியின் கனவு நனவாகவில்லை. ஜெயலலிதா மரணம் தொடங்கி எடப்பாடி பதவியேற்பு வரையில் நிறைய மாற்றங்கள் நடந்துகொண்டிருந்ததால், செந்தில் பாலாஜிக்கு சான்ஸ் அடிக்கவில்லை. இந்நிலையில் இந்த போராட்டத்தை திடீரென அறிவித்துள்ளார்.