எடப்பாடிக்கு தினகரன் ஆதரவாளர்கள் திடீர் செக்!

Friday, 16 June 2017 13:52 Published in தமிழகம்

சென்னை(16 ஜூன் 2017): டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், பழனியப்பன், இன்பதுரை, செந்தில்பாலாஜி உள்பட 32 பேர் நேற்று மாலை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்கள். சுமார் 30 நிமிடம் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சில நிபந்தனைகளை விதித்தனர். அதன் விபரம் வருமாறு:-

* உங்கள் ஆட்சியை தினகரன் கவிழ்க்க மாட்டார். ஆட்சியை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். கட்சியை தினகரன் கவனித்து கொள்வார்.

* தினகரனுக்கு இனி உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் இனி அவர் தலைமையில்தான் நடத்தப்பட வேண்டும்.

* தலைமை செயலகத்துக்கு வந்து கட்சி பணியாற்ற தினகரனுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அவர் தினமும் தலைமை செயலகத்துக்கு வருவார்.

* கட்சி பணியில் ஈடுபட வருமாறு டி.டி.வி.தினகரனை நீங்கள் வெளிப்படையாக அழைக்க வேண்டும்.

* அ.தி.மு.க. சார்பில் நடத்தப்படும் இப்தார் விருந்துக்கு டி.டி.வி.தினகரன்தான் தலைமை தாங்குவார்.

* அதுபோல அ.தி.மு.க. சார்பில் நடத்தப்படும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவும் தினகரன் தலைமையில்தான் நடைபெறும்.

* அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படும் எம்.ஜி.ஆர். பிறந்த தின விழாவை நீங்கள் நடத்தலாம். அந்த விழாவுக்கு பிரதமர் மோடி வர இருப்பதால், அந்த விழாவிலும் தினகரனுக்கு உரிய முக்கியத்துவம் தர வேண்டும்.

* அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். நீங்கள் யாருக்கு வாக்களிக்க உத்தரவிடுகிறீர்களோ, அவருக்கு வாக்களிக்க நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் தினகரனிடம் கட்சிப் பணியை ஒப்படைக்காவிட்டால், ஜனாதிபதி தேர்தலில் உங்கள் நிலைப்பாடுக்கு எதிராக நாங்கள் முடிவு எடுப்போம்.

* உங்களுக்கு இணையானது போன்ற அதிகாரங்கள் டி.டி.வி.தினகரனுக்கு வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வைத்தனர். இது எடப்பாடி பழனிசாமிக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்தது.

என்றாலும் தினகரன் ஆதரவாளர்களிடம் அவர் சுமூகமாக பேசினார். மூத்த அமைச்சர்களுடன் கலந்து பேசி விட்டு முடிவை தெரிவிப்பதாக கூறினார். தினகரன் எம்.எல்.ஏ.க்களின் இந்த திடீர் போர்க்கொடி அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாலை 5.30 மணிக்கு கோட்டையில் இருந்து புறப்பட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவர் மூத்த அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இரவு 7.30 மணி வரை சுமார் 1½ மணி நேரம் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களின் திடீர் நிபந்தனைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. சில நிபந்தனைகள் பற்றி பேச்சு வந்த போது காரசாரமான விவாதம் நடந்தது.

அப்போது சில மூத்த அமைச்சர்கள், கட்சியை முழுமையாக தினகரனிடம் ஒப்படைக்க கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அது போல எம்.ஜி.ஆர். பிறந்த தின நூற்றாண்டு விழாவில் தினகரனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் ஏற்க மறுத்தனர்.

ஜனாதிபதி தேர்தலை முன் வைத்து தங்களை தினகரன் ஆதரவாளர்கள் அச்சுறுத்துவதையும் மூத்த அமைச்சர்கள் விரும்பவில்லை. அமைச்சர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் டி.டி.வி. தினகரனை கட்சிப் பணியாற்ற அனுமதிப்பது தொடர்பாக எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை.

எடப்பாடி பழனிசாமியிடம் தினகரன் ஆதரவாளர்கள் வெள்ளிக்கிழமை (இன்று) முடிவை தெரிவிக்க வேண்டும் என்று கூறி இருந்தனர். ஆனால் என்ன சொல்வது என்பது புரியாமல் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவித்தபடி உள்ளார். அவருக்கு இந்த விவகாரம் புதிய நெருக்கடியாக மாறியுள்ளது.

அ.தி.மு.க. ஆட்சிக்கு இன்னும் சுமார் 4 ஆண்டு கால அவகாசம் இருப்பதால் கண்ணை மூடிக் கொண்டு தினகரன் ஆட்சியை கவிழ்க்க மாட்டார் என்று உறுதியாக சொல்கிறார்கள். அதே சமயத்தில் தன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மூலம் அவர் கட்சியில் மட்டுமின்றி ஆட்சியிலும் தலையிடுவார் என்கிறார்கள்.

இன்று கட்சியை முழுமையாக தன் வசப்படுத்திக் கொள்ளும் அவர், சில மாதங்கள் கழித்து, மேலும் சில எம்.எல்.ஏ.க்களை ஆசை காட்டி தன் பக்கம் சேர்த்துக் கொண்டு ஆட்சியை நடத்தவும் முயற்சி செய்யக் கூடும் என்று சில மூத்த அமைச்சர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதனால் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் திடீர் போர்க்கொடி அ.தி.மு.க.வில் மட்டுமின்றி தமிழக அரசியலிலும் புயலை கிளப்ப தொடங்கியுள்ளது. இந்த அதிகார போட்டியில் யார் பணிவார்கள்? யார் நிமிர்வார்கள்? என்பதைப் பொறுத்தே அ.தி.மு.க. அம்மா அணியின் எதிர்காலம் நிர்ணயமாகும்.

இதனால் அ.தி.மு.க. அம்மா அணியில் அடுத்து என்ன நடக்கும் என்பதை அனைத்துத் தரப்பினரும் ஆவலுடன் எதிர்பார்த்த படி உள்ளனர்.

Comments   
0 #1 henrymarker 2017-06-16 15:17
இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
தமிழ் செய்திகள்
Quote
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.